நாட்டு மாடுகள் அருகி வரும் இந்தக் காலக்கட்டத்தில், அவற்றை வளர்த்து பராமரிப்பதே பெரும் சவாலாக உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் சில விவசாயிகள் நாட்டு மாடுகள் வளர்ப்பில் மிகுந்த ஈடுபாட்டோடு இயங்கி வருகிறார்கள். மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான கணேசன், நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஈடுபடுவதோடு, அவற்றின் கழிவுகளைக் கொண்டு கலைப்பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறார். நாட்டு மாட்டுச்சாணம் மற்றும் கோமியம் மூலம் பல்வேறு அழகுப்பொருட்கள், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் போன்றவற்றை தயாரித்து அசத்தி வருகிறார். இயற்கை விவசாயத்திலும், நாட்டு மாடுகள் வளர்ப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட கணேசன், விவசாயத்திற்கு இடுபொருட்களாக பயன்படும் நாட்டு மாடுகளின் கழிவுகளை வைத்து வேறு ஏதாவது வித்தியாசமாக செய்து பார்க்கலாமே என ஆரம்பத்தில் யோசித்திருக்கிறார். இதையடுத்து சிறிய அளவில் சில பொருட்களைத் தயாரித்திருக்கிறார். அந்தப் பொருட்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதனால் கலைப்பொருட்களின்
எண்ணிக்கையைக் கூட்ட ஆரம்பித்தார். இப்போது 250க்கும் மேற்பட்ட கலைநயம் மிகுந்த பொருட்களை செய்து சாதனை படைத்து வருகிறார். இதுபோன்ற இயற்கை விவசாயத்தோடு இணைந்த பல்வேறு தொழில்களை செய்வதன் மூலமே விவசாயிகள் ஓரளவு வருமானத்தை ஈட்டி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள இயலும் என மற்ற விவசாயிகளுக்கு பாடமாகவும் விளங்குகிறார்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பத்தி, சாம்பிராணி, விபூதி, சோப், ஃபேசியல் பவுடர், பல்பொடி போன்ற பயன்பாட்டு பொருட்களும் கலை வடிவத்திலான கடவுள் உருவங்கள் மற்றும் அலங்கார தோரண மாலைகள், அலங்கார தொங்கும் தோரணங்கள், பரிசுப் பொருட்கள், காட்சிப் பொருட்கள், பயன்பாட்டு பொருட்களான செல்போன் ஸ்டாண்ட், பென் ஸ்டாண்ட், பத்தி ஸ்டாண்ட், விசிட்டிங் கார்டு ஸ்டாண்ட், பூந்தொட்டி மற்றும் நிறுவனங்களின் லோகோ என பல்வேறு பொருட்கள் இவரது கைவண்ணத்தில் உருவாகி வருகின்றன. நாட்டு மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி கையால் உருவாக்கப்படும் இந்தப் பொருட்கள் அனைத்தும் நெகிழிக்கு மாற்றான பொருளாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு தராத வகையில் இருப்பதாலும் இன்றைய காலகட்டத்தில் இதன் பயன்பாடு முக்கியத்துவம் பெறுவதாகவும் உள்ளது.
இதுகுறித்து விவசாயி கணேசன் கூறுகையில், “ சிறு வயதிலிருந்தே இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள், ஆடு, கோழி வளர்ப்பு என இயற்கையோடு இயற்கையாக இயங்கி வருகிறேன். எனது தாத்தா, அப்பா போன்றோர் இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தந்தார்கள். இயற்கை விவசாயத்திற்கு நாட்டு மாடுகள்தான் அடிப்படை. பன்னெடுங்காலமாகவே நாட்டு மாடுகளோடு இணைந்த ஒரு இயற்கையான வாழ்வியல் முறையையே நமது முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். இன்றைய காலகட்டத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. எனவே நாட்டு மாடுகளைப் பாதுகாக்கவும், இயற்கை விவசாயத்தை எளிமையாக்கவும், நாட்டு மாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறேன். இப்போது வரை 250க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து இருக்கிறேன். நாட்டு மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தில் இருந்து மட்டுமே இந்தப் பொருட்களை செய்கிறேன். இந்தளவுக்கு அழகாகவும், நேர்த்தியாகவும் வேறு பொருட்களைக் கொண்டு நிச்சயம் செய்ய முடியாது. ஒரு பொருள் உடைந்து விட்டாலோ, இந்தப் பொருள் வேண்டாம் என்று நினைத்தாலோ அதைக் கரைத்து மீண்டும் வேறு ஒரு பொருளைச் செய்துவிடலாம். அந்தப் பொருளை எரித்தால் அதில் வரும் சாம்பலை பல்பொடியாகவும், திருநீறாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நாட்டு மாடு மீது ஆர்வம் உள்ளவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும், சுய உதவிக்குழுவினருக்கும் இதுபோன்ற மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கிறேன். இது நாட்டு மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கக்கூடிய வாய்ப்பாக விளங்குகிறது. இதுபோன்ற செயல்களின் மூலம் நாட்டு மாடுகளை மீட்டெடுப்பதில் நமது பங்களிப்பும் இருக்கிறது என்ற மனநிறைவு கிடைக்கிறது’’ எனக்கூறி மகிழ்ச்சியுடன் புன்னகைக்கிறார்.
தொடர்புக்கு:
கணேசன்: 99420 85413.
*பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கணேசன் சிறிது காலம் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்கிறார். பின்பு ஊருக்கு வந்து 10 ஏக்கர் நிலத்தை வாங்கி முழு நேர விவசாயியாக மாறி இருக்கிறார். இதில் நாட்டு மாடுகளை வைத்து முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் பார்த்து வருகிறார்.
* நாட்டு மாடுகளின் கழிவுகளைக் கொண்டு பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், அமிர்தகரைசல் போன்ற இடுபொருட்களைத் தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்துகிறார்.