விராலிமலை: இலுப்பூர் பழைய மார்க்கெட் பின்புறம் உள்ள சாயக்கார தெருவில் வசிக்கும் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 30 அடி ஆழம் கொண்ட பயன்பாடற்ற கிணற்றில் 4 அடி தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை மதியம் அவ்வழியாக மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு ஒன்று கால் தவறி இந்த கிணற்றுக்குள் விழுந்து அலறி உள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து தகவலை இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நிலை அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடம் சென்று 30 அடி ஆழமான பயன்பாடற்ற கிணற்றுக்குள் கயிறு மூலம் உள்ளே இறங்கி ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் பசுமாட்டை உயிருடன் மீட்டனர். மேலே உயிருடன் மீட்கப்பட்ட பசு மாட்டின் உரிமையாளர் யார் என்று விசாரிப்பதற்குள் மாடு அந்த இடத்தை விட்டு நழுவி ஓடி விட்டது. இதனால் மாட்டின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை இருப்பினும் மாடு உயிருடன் மீட்கப்பட்டது அப்பகுதியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.