மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை 2 கால்களும் கட்டப்பட்ட நிலையில், ஒரு பசுமாடு மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மாடு விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இசிஆர் சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில், இன்று காலை 2 கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒரு பசுமாடு மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு 2 கால்களும் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த பசுமாட்டை மீட்டு, கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு போலீசார் விசாரித்ததில், அந்த பசுமாட்டின் உரிமையாளர் என்பது போன்ற விவரங்களை அறிய முடிவில்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மாட்டின் உரிமையாளர் யார், அந்த மாடு கறிக்காக அடித்து கொன்றார்களா அல்லது விஷ ஊசி போட்டு மாடு கொல்லப்பட்டதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.