Wednesday, February 28, 2024
Home » பசு பூஜித்த புண்ணிய தலங்கள்

பசு பூஜித்த புண்ணிய தலங்கள்

by Kalaivani Saravanan

சூரிய வழிபாட்டிற்கு அடுத்ததாக மாட்டுப் பொங்கல் மனிதர்களின் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஆவினங்களை ஆராதிக்கும் திருநாளாகும். பசுவும் காளையும் உழவர்களின் நண்பன்
மட்டுமல்லாது, ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டது. ரிஷபம், நந்தி, பசுக் கூட்டம் என்று இதை பல வகையாகப் பிரிக்கின்றன. இவை மூன்றையும் எப்போதும் வழிபடச் சொல்கின்றது, இந்துமதம். பசுக் குலத்தையே நந்தகுலம் என்றழைப்பர். ஆண்காளையை நந்தி என்றும் பெண் பசுவை நந்தினி என்றும் அழைப்பர்.

கிருஷ்ணன், பசுவை மேய்த்ததாலே கோபாலன் என்று பெயர் பெற்றான். பசுக்களை மேய்த்ததாலேயே அவர்கள் நந்தகோபர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையின் உருவைக் கொண்டவரையே ரிஷபம் என்கிறோம். காளையின் வடிவில் படுத்திருக்கும் இவரே ரிஷப தேவர் ஆவார். இவரைத்தான் நாம் நந்தி என்றழைக்கிறோம். ஈசன் நந்திமீதேறி வருவான் என்பதை ‘வெள்ளை எருதேறி’, ‘விடையேறி’ என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன.

தேவாரத்தில் ‘நந்தி நாமம் நமசிவாய’ என்றும், ‘நங்கள் நாதனாம் நந்தி’ என்றும் திருமந்திரம் பேசுகிறது. ஆகவே, நந்தியும் சிவமும் வெவ்வேறல்ல என்பது தெளிவாகிறது. கோயில்களில் விழா நடக்கும்போது நந்திக்கொடியை பறக்கவிடுவர். ரிஷப தேவருக்கும், நந்தியம் பெருமானுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இருவரும் வெவ்வேறானவர்கள். கருவறைக்கு நேரேயுள்ள காளை வடிவம் கொண்ட ரிஷபதேவர் என்கிற நந்தியிலிருந்து நந்தியம் பெருமான் வேறுபட்டவர்.

நந்தியம் பெருமானுக்கு, மனித முகத்தில் காளையின் தோற்றத்தோடும், இரண்டு கால்களோடும் இருப்பார். நந்திதேவர் வெண்ணிறமுடையவர். முக்கண் கொண்டவர். நான்கு கைகளை உடையவர். ஜபமாலை, சூலம், அபயவரதம் காணப்படும். நந்தித்தேவரின் நாதஒலியால் உண்டானதே நந்திநாதோற்பவம் என்ற நதி. இது காசியில் இருக்கிறது. ஆவுடையார் கோயில் எனும்
தலத்தில், கருவறையில் சிவபெருமான் அருவமாக ஆத்மநாதராக அருள்கிறார். அதேபோல, ரிஷபதேவரும் அருவமாக அமைந்துள்ளார். திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள செங்கம் எனும் தலத்தில் ரிஷபபுரீஸ்வரர் எனும் திருப்பெயரிலேயே அருள்கின்றார்.

கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருலோக்கி தலத்தில் ரிஷபத்தின் மீது ஈசனும் உமையும் காட்சி தரும் சிற்பம் அற்புதமானது. மதுரைக்கு அருகேயுள்ள காளையார்கோயில் என்றே ஒரு தலமும் உள்ளது. சுந்தரருக்குப் பெருமான் காளை வடிவில் காட்சியளித்தார். பசுவின் திருமுகமே தெய்வீகத்தன்மை பெற்றது. கண்களில் சூரிய சந்திரர்களும், முன் உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனிதநீர் வெளியேறும் நீரைப் பெறும் வாயிலாகவே கோமுகம் உள்ளது. கோமுகத் தாமரை அத்தனை பவித்ரமானது என்பதற்காகவே ஆலயங்களில் வைத்துள்ளனர்.

பெரிய வேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தைப் போன்ற அமைப்பில் வைத்திருப்பர். பாரததேசம் முழுவதுமே கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன. தஞ்சாவூர் திருவையாற்றைச் சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும், நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்புடைய தலங்களாகும்.

திருவையாறு, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக்கண்டியூர் போன்ற இந்த ஏழு ஊர்களுக்கும் நந்தியம்பெருமானின் திருமண நிகழ்வை முன்னிட்டு ஈசனும், அம்மையும் திருவுலா வந்து இறுதியில் திருமழபாடியில் திருமணத்தை நடத்துவர். பார்வதி தேவியே பசு உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால், கோமுக்தீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் அருள்கிறார். கரூர் எனும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டது.

அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் அழைக்கப்படுகிறார். கும்பகோணம் திருப்பனந்தாள் தலத்திற்கு அருகேயுள்ள பந்தணைநல்லூரில் ஈசன் பசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். வசிஷ்டரின் சாபத்தைப் பெற்ற காமதேனு பூஜித்த முக்கிய தலமாக ஆவூர் விளங்குகிறது. ‘ஆ’ எனும் பசுவின் பெயராலேயே இத்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பாகும். இது தசரதர் வணங்கிய கோயிலும் ஆகும். வசிஷ்டரால் வாஜபேயம் என்கிற யாகம் இங்கு நிகழ்த்தப்பட்டது. இத்தலம் கும்பகோணத்திற்கு 10 கி.மீ, தொலைவில் அமைந்துள்ளது.

இதேபோல, திருவண்ணாமலைக்கும் விழுப்புரத்திற்குமிடையே ஆவூர் எனும் தலம் உள்ளது. தஞ்சாவூர் அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள பசுபதிகோயில் இறைவன் பசுபதீஸ்வரர் ஆகும். தஞ்சைக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை எனும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டு இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அஷ்ட மங்கலச் சின்னங்களில் ஒன்றாகவே ரிஷபத்தை வைத்துள்ளனர். முக்கிய ஹோமங்களில் யாககுண்டலத்தைச் சுற்றிலும் வைக்கப்படும் மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று.

மாடுகளைக் கட்டும் மந்தைக்கு பட்டி என்று பெயர். இதையொட்டியே நிறைய ஊர்களுக்குப் பின்னால் பட்டி என்று சேர்த்தார்கள். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரம் எனும் தலத்தில் தேனுபுரீஸ்வரர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்கிறார். இது காமதேனுவால் பூஜிக்கப்பட்டதாகும். கொங்கு நாட்டிலுள்ள பெரும்பாலான சிவாலயங்கள் காமதேனுவால் வணங்கப்பட்டவையாகும்.

அதில் முக்கியமாக, பேரூர் தலத்தை ஆதிபட்டீஸ்வரம் என்றும், ஈசனின் பெயர் பட்டீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. கும்பகோண பட்டீஸ்வரத்தையும் பேரூரையும் தனியே பிரித்துக் காட்ட இத்தலத்தை ஆன்பட்டீஸ்வரம் எனவும் அழைத்தனர். பசுக்கள் ஈசனை நோக்கி வழிபட்டு தங்களை தற்காத்துக் கொள்ள கொம்பைப் பெற்றன. அப்படி தவமிருந்து பெற்ற ஊரே திரு ஆமாத்தூர் என்கிற திருவாமாத்தூர் ஆகும்.

விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இத்தலத்தை பசுக்களின் தாய்வீடு என்றே அழைப்பர். திருவாரூர், நன்னிலத்திற்கு அருகே கொண்டீச்சரம் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கும், காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்கிற பெயர் உண்டு. இந்த கொண்டியான அம்பிகை பசுவடிவத்தில் சிவனை வணங்கியதால் பசுபதீஸ்வரர் ஆனார். சென்னை குன்றத்தூருக்கு அருகேயுள்ள கோவூரில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அழகு சுந்தரராக காட்சியளித்தார். ‘கோ’ எனும் பசு வழிபட்டதாலேயே இன்றும் கோவூர் என்றழைக்கப்படுகிறது. கோமளம் என்கிற சொல்லுக்கு கறவைப்பசு எனும் பொருளும் உண்டு.

இப்படி கறவைப் பசுவால் வழிபடப்பட்ட கோமளேஸ்வரர் திருக்கோயில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னை மாடம்பாக்கத்திலுள்ள ஈசனை, பசு பூஜித்ததால் தேனுபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மிக ஆச்சரியமாக பொள்ளாச்சிக்கு அருகே களந்தை எனும் தலத்தில் கருவறையிலேயே அம்பிகை பசுவோடு சேர்ந்து எழுந்தருளி காட்சியளிக்கிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள சிக்கல் முருகன் தலத்தில் உறையும் ஈசனின் திருப்பெயர் வெண்ணெய்ப் பிரான் என்பதாகும். காமதேனுவின் பால் குளமாகத் தேங்கி வெண்ணெயாக மாறியதை வசிஷ்டர் லிங்கமாக்கி வழிபட்டார்.

தேனு என்று ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயர் இருந்தாலோ அவையெல்லாமுமே பசு பூஜித்த தலங்களாகும். மேல்மருவத்தூர் அச்சிறுப்பாக்கத்திற்கு அருகே தேன்பாக்கத்தில்பசுபதீஸ்
வரர் ஆலயம் உள்ளது. அதேபோல, கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர் உண்டு. இப்படி கபிலையால் பூஜிக்கப்பட்ட தலமாக திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது. நெல்லை சங்கரன் கோவிலில் அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். கோ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் வணங்கப்படுகிறாள்.

கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசுக் கொட்டிலின் அருகே சென்று அந்த அதிர்வுகளுக்குள் நில்லுங்கள். உங்கள் மனம் அமைதியாவதை உணரலாம். அதனால்தான் பெரியோர்கள் கோசாலையில் அமர்ந்து நாமஜபம் செய்வதென்பது கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள். நீங்கள் கடந்து செல்லும்போது பசுவைப் பார்த்தால் மனதுக்குள் வணங்குங்கள், உங்களின் முதல் மரியாதை அங்கு வெளிப்படட்டும்.

தொகுப்பு: ஜெயசெல்வி

You may also like

Leave a Comment

six + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi