சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் கோவிட் பெருந்தொற்று தீவிரமாகியபோது தன்னுடைய பெற்றோரை பறிகொடுத்தாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையை சீர்செய்து, பெரும் உயிரிழப்புகளை தடுப்பதில் திறம்பட செயலாற்றியவர், புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் என்று தெரியவந்துள்ளது. முதல்வரின் பல்வேறு அறிவிப்புகளை சிறு தடங்கல் கூட இல்லாமல் மக்களை சென்றடைய காரணமாகவும் இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்ற முருகானந்தம், கடந்த 2021 மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற தினத்தன்று தொழில்துறை முதன்மை செயலராக பணியாற்றி வந்தார். திமுக அரசு பொறுப்பேற்ற அந்த சமயம் கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்தில் இருந்தது. பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிக அளவில் இருந்த சமயத்தில் முருகானந்தம், தொழில்துறை முதன்மை செயலராக இருந்த காரணத்தால், தமிழ்நாடு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இவருக்கு இப் பொறுப்பினை வழங்கியது.
அவர் சக அதிகாரிகளான அருண் ராய் (அப்போதைய தொழில் துறை சிறப்பு செயலர்), பங்கஜ்குமார் பன்சால் (தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர்), ஜெ.குமரகுருபரன், (தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர், தாரஸ் அகமது, மற்றும் நந்தகுமார் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆக்சிஜன் பற்றாக்குறையை வெகு திறம்பட கையாண்டு பிற மாநிலங்களுடன் பேசி திரவ ஆக்சிஜன் கொண்டு வருவது, ஒன்றிய அரசுடன் பேசி ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவினை உயர்த்துவது, ஆக்சிஜன் உருளைகளை இறக்குமதி செய்வது, கிடைக்கப்பெற்ற ஆக்சிஜன் உருளைகளை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பகிர்ந்து அளிப்பது என திறமையாக கையாண்டார். இந்தப் பணி மிக சவாலான பணி. இருப்பினும், இரவு பகல் பாராமல் கடுமையாக போராடி ஆக்சிஜன் அளவினை அதிகப்படுத்தியதன் காரணத்தினால், பெருமளவில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன.
உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொத்துக்கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கான உடல்களை கங்கையில் வீசினர். மொத்தமாக குழியில் போட்டு மூடினர். மொத்தமாகவும் எரியூட்டிய சம்பவங்கள் நடந்தன. ஆனால் தமிழகத்தில் அதற்கு நேர் மாறாக உயிரிழப்புகள் முற்றிலும் குறைக்கப்பட்டது. அதற்கு காரணம், ஆக்சிஜன் பற்றாக்குறை தீர்க்கப்பட்டதுதான். அதேநேரத்தில், முருகானந்தத்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் தீவிர கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
பெற்றவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்ததோடு நின்று விட்டு, அவர்களை கவனிக்க முடியாமல், அந்த சமயத்தில் அரசு பணி மற்றும் மக்கள் பணி ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி ஆக்சிஜன் பற்றாக்குறையினால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட இருந்த நிலைமையை மாற்றினார். இவரது கடுமையான உழைப்பின் காரணத்தினால், அவரது பெற்றோரை சரிவர கவனிக்க முடியாமல் போனது. இதனால் தாய், தந்தையை அடுத்தடுத்து இழந்து விட்டார். கோவிட் பெருந்தொற்றில் இவ்வாறாக மிகுந்த அக்கறை கொண்டு பணியாற்றினார்.
முருகானந்தம், தொழில்துறை முதன்மை செயலராக பணியாற்றியபோது, பிற மாநிலங்களிலிருந்து தொழில் நிறுவனங்களின் முதலீட்டை தமிழ்நாட்டு பக்கம் கொண்டு வந்தவர். தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகளை கவனமாக கேட்டு உடனுக்குடன் அவற்றை தீர்ப்பதற்கான பணிகளை மேற்கொண்டவர். இவரது நேரடி கட்டுப்பாட்டில் இருந்த சிப்காட், டிட்கோ, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனங்கள் ஆகிய மூன்று நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.
பின்பு இவரது திறமையை நன்கு அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இவரை நிதித் துறையின் முதன்மை செயலராக பணியமர்த்தினார். தமிழ்நாட்டின் நிதித் துறை அப்போது கடுமையான நிதிப் பற்றாக்குறையில் இருந்தது. அந்த நிதி துறையின் நுணுக்கங்களை முருகானந்தம் நன்கு அறிந்து, பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்து நிதி நிலைமையை வெகுவாக சீரமைத்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி திரட்டி, ஒதுக்கீடு செய்தலை விரைவுபடுத்தினார். பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை முடித்து வைத்து அதில் உள்ள அரசு பணத்தினை அரசுக்கே திரும்ப கொண்டு வந்து அவற்றை புதிய திட்டங்களுக்கு பயன்படுத்தினார்.
மேற்கண்ட சீர்திருத்தங்களால் தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை வெகுவாக சீரடைந்து பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருந்தது. அதோடு, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை செயல்படுத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டினார். இத் திட்டத்தின் வாயிலாக 1 கோடியே 14 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டம் முழுக்க முழுக்க தரவுகள் அடிப்படையில் தகுதியான பயனாளிகளை கண்டறிய, வழிகாட்டு நெறிமுறைகளை இவர் உருவாக்கினார்.
அது போன்று பல்வேறு துறைகளிடமிருந்து தரவுகளை பெற்று ஒருங்கிணைத்து அத் தரவுகளின் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து அவர்களது வங்கி கணக்கில் மாதந்தோறும் பணம் செலுத்தப்படுவதை உறுதிபடுத்தினார். இத் திட்டத்தினை முதல்வர் துவக்கி வைப்பதற்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் முருகானந்தம். பெண்கள் சுய முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு பெற்றவர்களாக மாறுவதற்கு இந்த திட்டம் பெரிய வடிகாலாக அமைந்துள்ளது. கிராம பொருளாதாரத்தையும் வளர்ச்சியடைச் செய்துள்ளது.
அதே போன்று, தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், நீங்கள் நலமா ஆகிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவோடு கொண்டு வந்தார். அந்தக் கனவை நனவாக்கும் வகையில், திட்டங்களை ஒருங்கிணைத்து அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்து பணிகளை தீவிரமாக கண்காணித்து திட்டங்களை விரைவாக செயல்படுத்தினார். இதயம் காப்போம் திட்டம் இன்று கிராம அளவில் மக்களுக்கு பயன் உள்ள திட்டமாக மாறியுள்ளதற்கு முருகானந்ததின் தீவிர கண்காணிப்பும் ஆலோசனையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
முதலமைச்சரின் தனி செயலராக பதவி ஏற்ற பின்பு, உள்துறை, தொழில் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை, பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை போன்ற முக்கிய துறைகளின் திட்டங்களை தீட்டுவதிலும், அவற்றின் செயல்பாட்டினை கண்காணிப்பதிலும் பெரும் பங்காற்றினார். பல்வேறு துறைகளில் முக்கிய முத்தான திட்டங்களை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து அவற்றின் முன்னேற்றத்தை முடுக்கி விட்டார். தமிழ்நாடு அரசின் முத்தான திட்டங்களை விரைவாக ஆய்வு செய்த காரணத்தினால், பெரும்பாலான திட்டங்கள் நல்ல உருவமெடுத்து நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசின் தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ள இவருக்கு 37 துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசினுடைய திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சென்று அரசுக்கு நற்பெயர் கிடைக்க ஒரு உயர்ந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. துறைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உரிய செயல் திட்டங்களை உருவாக்கி ஆய்வு செய்து அவற்றை முடுக்கி விடும் பணியும் தலைமை செயலரிடம் உள்ளது. முருகானந்தத்திடம் உள்ள நிர்வாக திறமையினை நன்கு அறிந்த காரணத்தினால், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் பதவியை அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
* நிர்வாக நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்
முருகானந்தத்திடம் எந்த ஒரு நிர்வாக பிரச்சனையையும் கொண்டு சென்றாலும் அதில் உள்ள நுணுக்கங்களை அறிந்து அதில் உள்ள விதிகளை நன்கு படித்து அதற்கு தீர்வு காண்பதில் வல்லவர். ஒன்றிய அரசின் கப்பல் போக்குவரத்து துறையில் இணை செயலராக ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர். பல பெரிய திட்டங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். கரூர், கோயம்புத்தூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கலெக்டராக பணிபுரிந்தவர். டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் ஆணையராக பணியாற்றி வந்தபோது, அங்கு நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்காக தேவையான மென்பொருள் சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். கலைஞர் முதல்வராக இருந்போது, இவர் தமிழ்நாடு அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த சமயத்தில் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றினார்.