Monday, April 22, 2024
Home » ஊழல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, முறைகேடுகளை மறைக்க: மோடி மீடியா

ஊழல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, முறைகேடுகளை மறைக்க: மோடி மீடியா

by Ranjith

* மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக நாடெங்கும் ஊடகங்களை வளைத்து போட்ட பாஜ

2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ அரசு வந்த பிறகு பல மாநிலங்களில் ஜனநாயகத்தின் மக்களால் ஓட்டு போட்ட அரசு நடக்கவில்லை. பாஜவின் ஆபரேஷன் தாமரை மூலம் பணநாயகத்தால் வாங்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அரசுகள்தான் நடந்து கொண்டு இருக்கிறது. நம் நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் மக்கள் வைத்த நம்பிக்கையை மோசடி செய்து வருகிறது. நம் நாட்டின் மக்களாட்சியை சட்டமன்றத் துறை (நாடாளுமன்றம், சட்டமன்றம்), நீதித்துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத் துறை ஆகிய நான்கு தூண்களே தாங்கி கொண்டிருக்கின்றன.

இந்த 4 தூண்களை பணநாயகத்தால் மாற்றிவிட்டது ஒன்றிய பாஜ அரசு. மக்களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்ட நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத சட்டங்கள்தான் மிரட்டல் அரசியல் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மிரட்டல் அரசியல் என்பது பாஜவின் முப்படைகள் (சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை). இந்த முப்படைகள் யார் என்று கேட்டால் பள்ளி குழந்தைகள் கூட சொல்லும் அளவுக்கு பாஜ பிரபலப்படுத்தி உள்ளது. இந்த முப்படைகளை வைத்து நாட்டை சிதைத்து உள்ளது ஒன்றிய பாஜ அரசு.

நாட்டின் நான்கு தூண்களும் எத்தகைய தூய்மையான நோக்கங்களைத் தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கங்கள் இந்த பாஜ ஆட்சியில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி, சவால்களை எதிர் நோக்கி உள்ளன. நாற்காலிக்கு உள்ள 4 கால்களில் ஒரு கால் உடைந்தால் ஒரு பக்கமாக சாய்ந்து தடுமாறுமோ, அதுபோல்தான் பொன்னாக மிளிர வேண்டிய நாட்டின் 4 தூண்கள், துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு தூணுக்கும் மகத்தான வலிமையும், மதிப்பும் இருக்கிறது.

ஆனால், அவை இன்றைய பாஜ அரசால் காலில் மிதிக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டிய நான்காம் தூணான ஊடகம் மற்றும் பத்திரிகைளையும் வளைத்துவிட்டது ஒன்றிய பாஜ அரசு.

ஊடகங்களின் பணி என்ன?
* மறைக்கப்படும் உண்மையை மக்களுக்கு காட்டுவது

* அரசின் தவறான கொள்கை வெளிச்சம் போடுவது

* தவறான நிர்வாகம், அக்கறையின்மையை சுட்டி காட்டுவது

* அரசின் ஊழல், முறைகேடுகளை வெளிக்கொணர்வது

* பலவீனமானவர்களின் குரலாக ஒலிப்பது

* பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் பலமாக இருப்பது

இது எல்லாம் இன்று நடக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். குறிப்பாக ஒன்றிய பாஜ அரசு மீது கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு உள்ள அதிருப்திகள், காட்சிகள் மாறாத வடமாநிலங்கள், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை ஏற்றம், சிஏஜி வெளிப்படுத்தி ரூ.7.5 லட்சம் கோடி ஊழல், உச்ச நீதிமன்றம் அதிரடியால் வெளிவந்த தேர்தல் பத்திரம் முறைகேடு மற்றும் சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு, ரபேல் விமான ஊழல், குடியுரிமை சட்டம், விவசாயிகள் போராட்டம், பணவீக்கம், உள்நாட்டு உற்பத்தி குறைவு, தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதை பற்றி உண்மையான செய்திகளை எல்லாம் நாடெங்கும் உள்ள ஊடகங்கள், பத்திரிகைகள் மக்களுக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக பாஜவை தூக்கி பிடிக்கும் வகையில் போலி செய்திகள் மற்றும் எரிச்சலூட்டும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இதை மூத்த பத்திரிகையாளர்கள் ‘கோடி மீடியா’ என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய ஊடகங்களின் பெரும் பகுதி கண்காணிப்பு அமைப்பாக இல்லாமல், சொல்பேச்சு கேட்கும் செல்லமாக மாறி விட்டது என்று விமர்சித்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்.

2018ம் ஆண்டில், உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று, பல பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘கோடி மீடியா’வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள் மற்றும் 2020-2021 இந்திய விவசாயிகள் போராட்டத்தின் போது இந்த வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

* கோடி மீடியா யார்? யார்?
ஜீ நியூஸ், டைம்ஸ் நவ், என்டிடிவி, ரிபப்ளிக், பாரத் டிவி, ஆஜ் தக், ஏபிபி நியூஸ், சுதர்சன் நியூஸ், சிஎன்என்-நியூஸ்18, இந்தியா டிவி, ஓபிண்டியா, டிவி டுடே நெட்வொர்க், இந்தியா டுடே, டைனிக் ஜாக்ரன், பஸ்ர்ட் போஸ்ட் மற்றும் பல ஊடக நிறுவனங்களைதான் கோடிய மீடியா என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஊடக நிறுவனங்களை சார்ந்து பல பத்திரிகைகளும் கோடி மீடியாவாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த ஊடகங்களுக்கு உள்ளூர் முதல் தேசிய அளவில் வரை பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் உள்ளன. இந்த கோடி மீடியாக்கள் தங்களுடைய நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்கும் தைரியத்தை இழந்துவிட்டு, ஒன்றிய அரசின் மடியில் அமர்ந்திருந்து கொண்டு அரசின் ஓட்டைகள் மற்றும் தவறுகளை மறைக்கிறது. உண்மையான பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை திசை திருப்புகிறது. பலவீனமான, பயமுறுத்தும் மற்றும் முதுகெலும்பில்லாத ஊடகங்கள் ஜனநாயகத்திற்கும் தேசத்திற்கும் ஆபத்தானவை.

கோடி மீடியாவில் உள்ள தொலைக்காட்சி பெரும்பாலும் மோடியின் நெருங்கிய நண்பர்களும், ஒன்றிய அரசின் நிழலுமான அதானி மற்றும் அம்பானி (ரைட் ஹேண்ட், லெப்ட் ஹேண்ட்) கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மோடியின் நண்பர்கள் அரசுக்கும், அரசு கைக்காட்டும் செய்தி நிறுவனங்களுக்கும் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் பல்வேறு வகையில் நிதியுதவி அளித்து வருகின்றனர். இதனால் மோடியின் நெருங்கிய நண்பர்கள் செய்யும் மெகா ஊழல்கள், அவர்களாக மக்கள் மீது சுமத்தப்படும் விலைவாசி உயர்வுகள், தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளை கோடி மீடியா (எ) மோடி மீடியா மூடி மறைத்து வருகிறது.

அந்த வகையில், டைம்ஸ் நவ் முழுக்க முழுக்க பாஜவுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறது. பாஜவை தூக்கி பிடிக்கிறோம் என்ற போர்வையில் ஒரு தரப்பு மக்களுக்கு எதிரான வெறுப்பு செய்திகளை பரப்பி வருகிறது. இவர்களுக்கு சொந்தமான செய்தி தாளும் கோடி மீடியாவின் கொள்கையை தாங்கி பிடிக்கிறது. அர்னாப் கோஸ்சாமி நடத்தி வரும் ரிபப்ளிக் டிவிக்கு பாஜ தான் பண உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் தூக்கத்தில் கூட பாஜவையே தான் நினைத்து கொண்டிருப்பார். நியூஸ் 18 நெட்வொர்க் அம்பானிக்கு சொந்தமானது. இது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு அங்கு உள்ளவர்கள் வேலை செய்தாலும் மோடிக்கு எதிரான செய்திகள் வர வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு விஸ்வாசம். மற்றொரு பிரபல ஊடகம் என்டிடிவி. இது மோடியின் மற்றொரு கை. காரணம் இந்த நிறுவனத்தின் பெரும் பகுதி பங்கை அதானி வாங்கி உள்ளார்.

நேர்மையின் சிகரம் பங்குதாரராக இருக்கும்போது நண்பனுக்கு எதிராக எப்படி செய்தி போடுவார். மற்றொரு தேசிய ஊடகமான இந்தியா டுடேவும், பல மொழிகளில் செயல்படும் ஜீ நியூஸ்சும் மோடியையும், பாஜவையும் தூக்கி பிடிப்பதிலேயே மும்முரமாக உள்ளனர். நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்களுக்கு நாட்டை வழிநடத்துவதிலும், வளர்ச்சியிலும் முக்கிய பங்கு இருக்கிறது. குறைந்தபட்சம் உண்மை செய்திகளை கொண்டு மக்களுக்கு சேர்க்கும் அறத்தையாவது பின்பற்றலாம்.

மாறாக நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டும் தனது நண்பர்களுக்காக தாரை வார்த்து வருவதை கைக்கட்டி கண்களை மூடி வேடிக்கை பார்ப்பதற்கு வெட்கி தலைக்குனிய வேண்டும். கடந்த முறை பல கட்சியினரை மிரட்டி கூட்டணியில் அமர வைத்த பாஜவுக்கு, இந்த முறை அந்த கட்சியினர் அதிர்ச்சி வைத்தியம் தந்து உள்ளனர். தோளில் சாய்ந்து கொள்ள இடம் தந்தால் வீட்டையே ஆட்டை போட முயலும் பாஜவின் சூழ்ச்சியை புரிந்து கூட்டணியில் இருந்து கட்சியினர், நாட்டு நலன் கருதியும், கட்சி நலன் கருதியும் பாஜவுக்கு டாட்டா காட்டிவிட்டு வெளியே வந்துவிட்டனர்.

இதனால் பல மாநிலங்களில் கூட்டணிக்காக வீடு வீடாக தேடி சென்று புள்ள பிடிக்கும் வேலையில் பாஜ ஈடுபட்டு வருகிறது. உண்மை இப்படி இருக்க பாஜவினர் 370, 400 இடங்கள் வெல்வோம் என்று கூறுவதை, பாஜ 370, 400 வெல்லும் என்று கோடி மீடியா செய்திகளை பரப்பி வருகிறது. மோடி போகிற இடமெல்லாம் நேருவை திட்டி தீர்ப்பதே வேலையாக உள்ளார். அவருடைய 10 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தார் என்று ஒரு இடத்தில் கூட பேசவில்லை.

கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். இதற்காக நிதி ஏதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்த சுற்றுப்பயணத்தால் மக்களை தேர்தல் தேதி அறிவிப்பும் தள்ளி போயி உள்ளது. இதுகுறித்து மோடி மீடியா வாயே திறக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் இதேதான். மக்கள் பிரச்னைகளை பேசாமல் பல ஆண்டுகளுக்கு முன் ஆண்ட தலைவர்களை குறை சொல்வதே மோடி வேலையாக வைத்து உள்ளார்.

இதுகுறித்தும் நண்பர் அதானி குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய 146 எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுவே மோடி அரசின் வரலாற்று சாதனை. நாடு முழுவதும் பாஜவுக்கு எதிரான அலை வீசும் நிலையில், மக்களை திசை திருப்பும் வகையில் பாஜவுக்கும், மோடிக்கும் செல்வாக்கு உள்ளது போல் மோடி மீடிய செய்திகளை பரப்பி வருகின்றனர். இந்த சூழலில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜவுக்கு பெரும்பான்மை கிடைத்ததும் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கர்நாடகா பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டே பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக பாஜ அமைச்சர்கள், எம்பிக்கள் நாட்டின் சமூக நீதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பாஜ எம்பி சர்ச்சை பேச்சு, இந்துத்துவ கொள்கை நாடு முழுவதும் பாஜ அமல்படுத்த துடிப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஏற்கனவே மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையே இல்லாமல் போய்விடும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நம் நாட்டின் பாரம்பரிய ஜனாநயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும், பன்முகதன்மையும், சமூக நீதியையும் பாதுகாக்க வேண்டுமென்றால் பாஜவின் உண்மை முகத்தை தோலுரிக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் மோடி மீடியா செய்யுமா என்று மில்லியன் டாலர் கேள்விதான்.

* உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு – இந்தியா. இதை வல்லரசு நாடான அமெரிக்கா கூட பெருமையாக சொல்லும். ஆனால், இன்று ஒவ்வொரு குடிமகனும் ‘இந்தியா ஜனநாயக நாடு’ என்று சொல்ல வெட்கப்படுகின்றனர். ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியலமைப்பு சட்டம். இந்த அரசியலமைப்பு சட்டத்தையே குழி தோண்டி புதைக்கும் பணியை செய்து வருகிறது ஒன்றிய பாஜ அரசு.

நம் நாட்டில் இன்று ஜனநாயக தேர்தல் திருவிழா கேலி கூத்தாக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல் திருவிழா போன்று வேறு எங்கும் இல்லை. இதனால் நம் நாட்டு தேர்தலை உலகமே உற்று நோக்கும். ஆனால், மக்கள் ஒரு முடிவு தந்தார்கள் என்றால் ஒன்றிய பாஜ அரசு ஒரு முடிவை மக்களுக்கு தருகிறது. அதுதான் ‘ஆபரேஷன் தாமரை’. அது வேறொன்றும் இல்லை. ஜனநாயகத்தை பணநாயகத்தால் வாங்குவதே ஆபரேஷன் தாமரை.

* 10 ஆண்டுகள் பத்திரிகையாளர்களை சந்திக்க பயந்த மோடி
சுதந்திரம் அடைந்து நம் நாடு இதுவரை 14 பிரதமர்களை சந்தித்து உள்ளது. நாட்டை ஆளும் பிரதமர்கள் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், கலவரங்கள் போன்ற முக்கிய பிரச்னைகளை பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்க வேண்டும். இதுவரை நாட்டை ஆண்ட பிரதமர்கள் பத்திரிகையாளர்களை துணிச்சலாக சந்தித்து பேட்டி அளித்து உள்ளனர்.

ஆனால் சக்தி வாய்ந்த தலைவர் என்று பாஜவினர் பெருமை கொள்ளும் பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு ஆதரவாப்ன செய்தி நிறுவனத்துக்கு மட்டும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட சாதகமான கேள்விகளுக்கு மட்டும் ரகசியமாக பதிலளித்துவிட்டு அரசு சார்பில் அறிக்கைகளை விட்டு தப்பித்து வருகிறார்.

* ஊடக நிறுவனங்களை விட்டு வைக்காத பாஜவின் முப்படைகள்
பாஜவின் முப்படைகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் பலிகிடா ஆகவில்லை. 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள், சம்மன்கள், ரெய்டுகள் என 44 சம்பவங்கள் நடந்து உள்ளன. இவர்களில் 9 சம்பவம் வருமான வரித் துறையிலும், 15 அமலாக்கத்துறையிலும், 20 என்ஐஏவை சார்ந்தது.

* பாஜவுக்கு ஜிங் ஜக்
ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர், ஒரு செய்தி தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறார். இவர் தற்போது பாஜவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இவருடைய தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் தேர்தல் கருத்து கணிப்பு எடுத்து வெளியிட்டது. இதில் திமுகவுக்கு 38.33%, பாஜவுக்கு 18.48%, அதிமுகவுக்கு 17.26% என்று கூறியிருந்தது. தமிழகத்தில் 2 அல்லது 3% வாக்குகளை கூட தாண்டாத பாஜவுக்கு, 50 ஆண்டுகள் அரசியல் செய்து வரும் அதிமுகவை விட அதிக வாக்கு வங்கி இருப்பதாக வெளியிட்டுள்ளது. இது, கமலாலயம் வாசலில் எடுக்கப்பட்டதா? என்று பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

* பத்திரிகை சுதந்திரத்தில் பாகிஸ்தான், ஆப்கானை விட இந்தியா மோசமான நிலை
எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் (REPORTERS WITHOUT BORDERS) என்ற சர்வதேச ஊடக கண்காணிப்பு நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரங்களை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2023ம் ஆண்டுக்கான 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசை பட்டியலில் 161வது இடத்துக்கு தள்ளப்பட்டு, சிவப்பு மண்டலத்தில் இந்தியா சென்று உள்ளது. 2016ல் 133வது இடம், 2021ல் 142வது இடம், 2022ல் 150வது இடம் என கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் நார்வே, 2ம் இடத்தில் அயர்லாந்து, 3ம் இடத்தில் டென்மார்க், 4வது இடத்தில் ஸ்வீடன், 5வது இடத்தில் பின்லாந்து இடம் பிடித்து உள்ளது. வடகொரியா கடைசி இடத்திலும், சீனா 179வது இடத்திலும் உள்ளது. வல்லரசு நாடுகளான பிரான்ஸ் 24வது இடத்திலும், பிரிட்டன் 26வது இடத்திலும், அமெரிக்கா 45வது இடத்திலும் உள்ளன. உக்ரைன் போரால் ரஷ்யா 164வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் 150வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 152வது இடத்திலும் உள்ளன.

* மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் பத்திரிகையாளர்கள் 32 பேர் கொலை
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014 முதல் 2024 வரை 32 பத்திரிகையாளர்கள், ஊடக ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசின் முறைகேடுகள் மற்றும் பலவிதமான சிக்கலான செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிகையாளர்கள் மீது உபா சட்டம் போடப்பட்டு தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க உபா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது பத்திரிகையாளர்கள் மீது போடப்படுகிறது. 2010ம் ஆண்டு முதல் இதுவரை 16 பத்திரிகையாளர்கள் மீது உபா சட்டம் போடப்பட்டுள்ளது. இதில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2022ம் ஆண்டில் இந்தியாவில் குறைந்தது 194 பத்திரிகையாளர்கள் போலீஸ் கைது, தடுப்புக்காவல், நீதிமன்ற வழக்குகள் அல்லது உடல் ரீதியான தாக்குதலுக்கு என அரசாங்க அமைப்புகள், குற்றவாளிகள் மற்றும் ஆயுதமேந்திய குழுக்களால் குறிவைக்கப்பட்டனர். அதிகபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 48 பேர், தெலுங்கானாவில் 40 பேர், ஒடிசாவில் 14 பேர், உத்தரபிரதேசத்தில் 13 பேர், டெல்லியில் 12 பேர், மேற்கு வங்கத்தில் 11 பேர் என குறிவைக்கப்பட்டனர்.

பேசப்படாத முக்கிய ஊழல்கள், பிரச்னைகள்
* ரபேல் விமான ஊழல்
* சிஏஜி வெளிப்படுத்திய ரூ.7.5 லட்சம் கோடி ஊழல்
* தேர்தல் பத்திரம் ஊழல்
* தேர்தல் ஆணையர் ராஜினாமா
* சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு
* குஜராத் உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்கள், அதானி துறைமுகங்கள் வழியாக கடத்தப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருட்கள்
* அதானிக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்
* அதானி, அம்பானிக்காக குறைக்கப்படாத பெட்ரோல், டீசல், காஸ் விலை
* மின்கட்டண உயர்வுக்கு காரணமான அதானியின் நிலக்கரி ஒப்பந்தம்
* அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி
* கோடீஸ்வர தொழிலதிபர்களுக்காக ரத்து செய்யப்பட்ட வாராக்கடன்கள்
* லஞ்சம் வாங்கும் ஈ.டி, ஐடி, சிபிஐ
* மணிப்பூர் கலவரம், பெண்கள் பலாத்காரம்
* பாஜ ஆளும் மாநிலங்களில் தொடரும் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல்
* இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு
* அதானி, அம்பானிக்காக மாற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டங்கள்
* அதானி நிறுவனத்துக்காக வெளிநாடுகளுக்கு பயணித்து ஒப்பந்தங்களை வழங்க தலைவர்களிடம் சிபாரிசு செய்யும் மோடி
* மோடி ஆட்சிக்கு வந்தபின் மளமளமென உயர்ந்த அதானி, அம்பானி சொத்துகள்
* நாடு முழுவதும் உள்ள அதானியின் விமான நிலையங்கள், துறைமுகங்கள்
* ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் பாஜவின் ஆபரேஷன் தாமரை
* விவசாயிகள் மீதான தாக்குதல்
* அதானி, மக்கள் பிரச்னைகளை எழுப்பியதால் வரலாற்றில் முதல்முறையாக 146 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்

You may also like

Leave a Comment

18 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi