*கண்காணிப்பு கேமிராவும் பொருத்தம்
தென்காசி : குற்றாலத்தில் நேற்று மதியம் வரை வெயிலும் மதியத்திற்கு பிறகு சற்று சாரலும் காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக அருவிகளில் தண்ணீர் நன்றாக வருகிறது.
நேற்று மதியம் வரை சற்று வெயில் காணப்பட்டது. மதியத்திற்குப் பிறகு திடீரென மேக கூட்டம் திரண்டு சிறிது நேரம் சாரல் பெய்தது. மாலையில் இதமான காற்று வீசியது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக வருகிறது.
பழைய குற்றால அருவி, புலி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் ஓரளவு நன்றாக காணப்பட்டது. இதற்கிடையே குற்றாலம் மெயின் அருவிப்பகுதியில் நடைபெறும் செயின் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்களை கண்டறியும் வகையில் ஆண்களையும் பெண்களையும் கண்காணிக்கும் வகையில் கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் மெயின் அருவியில் உயரமான பகுதியில் நின்று போலீசார் கண்காணிக்கும் வகையில் தற்காலிக கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.