லக்னோ: அனுமதியின்றி தேர்தல் பிரசார கூட்டம் நடத்திய வழக்கில் உபி அமைச்சருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உபி மாநில அமைச்சராக இருப்பவர் கபில் தேவ் அகர்வால். பாஜவை சேர்ந்த இவர் முசாபர்நகர் நகர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி துறையை கவனிக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு ஜன.11ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்காக முசாபர்நகர் தொகுதியில் உள்ள ராம்லீலா டிலா பகுதியில் அனுமதியின்றி பிரசார கூட்டம் நடந்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக கபில்தேவ் மற்றும் பலர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு எம்பி,எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்த வழக்கில் கபில் தேவ் அகர்வால் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில், வரும் 13ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அமைச்சர் கபில் தேவ் அகர்வாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்டை சிறப்பு நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.