தென்காசி: குற்றாலத்தில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்படுவதால் சீசன் களைக்கட்டி காணப்படுகிறது. குற்றாலத்தில் ஜூலை மாதம் துவங்கியது முதல் சீசன் அருமையாக உள்ளது. தினமும் சாரல் பொழிகிறது. வானம் எப்பொழுதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பகலில் சூரியன் தலை காட்டுவதே இல்லை. வெயிலும் இல்லை. குளிர்ந்த சூழல் நிலவுகிறது இதமான காற்று வீசுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.
மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக வருகிறது. பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக வருகிறது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது அனைத்து அருவிகளிலும் தடை இன்றி குளிக்க அனுமதிக்கப்படுவதாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதாலும் சீசன் களைகட்டி காணப்படுகிறது.