மதுரை: திருச்சி மாவட்டம், முருங்கப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிபொருள் நிறுவனத்தில் 2016, டிச.1ல் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் இறந்தனர். புகாரில் வழக்கு பதிந்து, உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அதிகாரி விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை 2017ல் ஐகோர்ட் கிளை பிறப்பித்தது.
இதையடுத்து அந்நிறுவனத்திற்கு நிபந்தனையுடன் தடையில்லா சான்றை 2018ல் டிஆர்ஓ வழங்கினார். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.மதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: இது ஒரு நேர்மையான பொதுநல வழக்கு அல்ல. மாறாக நீதிமன்ற நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்வதாகும். பொதுநல வழக்கை தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கில் கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. டிஆர்ஓ உத்தரவில் தலையிட எந்த காரணத்தையும் காண முடியவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.