சென்னை: ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்பப் பெறுவதாகவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதையடுத்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கிரி, விஜயநாராயண், அபுடுகுமார் ராஜரத்தினம் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆவணங்களை தாக்கல் செய்தார். தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் படி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக நம்புவதற்கு உரிய காரணங்கள் இருந்தாலும், சந்தேகிப்பதற்கு காரணங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தலாம். இந்த வழக்கை பொறுத்தவரை 41 முதல் தகவல் அறிக்கைகள் உள்ளன. அந்த அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவித்தார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களுக்கும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முன்வைக்கும் வாதத்திற்கும் ஒத்துப் போகவில்லை. வீட்டை சீல் வைப்பதற்கு அமலாக்க துறைக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, சீல் வைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை இதை பதிவு செய்ய வேண்டாம். சோதனைக்கு சென்ற இடத்தில் வீடு, அலுவலகம் பூட்டியிருந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மனுதாரர்களின் வீடுகளில் ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். அதை பதிவு செய்து கொண்டு இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவேண்டும். பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், சீல் வைப்பதற்கு அதிகாரம் இல்லை என்றபோது அமலாக்கத்துறை எப்படி சீல் வைத்தது என்று கேட்டனர். அப்போது, அமலாக்கத்துறை வழக்கறிஞர், டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதன் முடிவுக்கு உயர்நீதிமன்றம் காத்திருக்கலாம் என்றார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு காத்திருக்காமல் மற்றவர்கள் மீது சோதனை நடத்த சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பி, இடைக்கால உத்தரவுக்காக விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழில் அதிபர் விக்ரம் ரவீந்திரன் இடம் பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், அவர்களின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசை திரும்ப பெற உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில் இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த நீதிபதிகள், பிரதான மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.