சென்னை: அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடி கம்பம் அமைக்கப்பட்ட வழக்கில், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்ட வழக்கில், திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவரும், அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவருமான அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, புழல் சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் புழல் சிறையிலிருந்து வாகனங்கள் வெளியே வரும் கேட்டின் நுழைவாயிலில் காத்திருந்தனர். இந்நிலையில், கட்சியினரை, செய்தியாளர்களை அமர்பிரசாத் ரெட்டி சந்திப்பதை தவிர்க்கும் வகையில் 6 பேர் சென்ற வாகனத்தை புழல் சிறையில் வாகனங்கள் உள்ளே செல்லும் மற்றொரு கேட்டின் வாயிலாக வெளியே அழைத்து, சாலையின் எதிர் திசையில் போக்குவரத்தை தடை செய்து, எதிர்திசையில் காவல்துறையினர் பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர்.இதனால், அமர் பிரசாத் ரெட்டியை வரவேற்பதற்காக சிறை வாசலில் காத்திருந்த கட்சியினர் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.