இடைப்பாடி: அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் அதிமுக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம். சந்திரயான் 3 நிலவில் தரை இறங்கியது நாட்டிற்கு கிடைத்த வெற்றி. தமிழக விஞ்ஞானிகள், மற்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என நிரூபணம் ஆகி உள்ளது. இது இந்தியா வல்லரசு நாடாக உயர்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களில், ஒரு சிலரை தவிர்த்து, கட்சிக்காக உழைத்தவர்கள் மீண்டும் வர நினைத்தால் இணைத்துக் கொள்வோம். வேறு கட்சியுடன் சேர்ந்து, அதிமுகவை கெடுக்க நினைத்தவர்கள், அழிக்க நினைத்தவர்கள், எட்டப்பராக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
*கொடநாடு கொள்ளை விவகாரம் ஊடகங்களை மிரட்டிய எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘கொடநாடு வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். சாலையில் செல்பவர்களை எல்லாம் அழைத்து வைத்துக்கொண்டு ஊடகம் கேள்வி கேட்பது தவறு. தனபால் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். நிலஅபகரிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வந்தவர். கனகராஜை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று இனி யாரும் சொல்லக்கூடாது. அவர் சசிகலாவின் கார் ஓட்டுநராக இருந்தவர். இனிமேல், கனகராஜை ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என கூறினால், நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம்.
அவர் ஒருநாள் கூட ஜெயலலிதாவுக்கு ஓட்டுனராக இருந்தது இல்லை. ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு. கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி பேசுவதே தவறு. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, அதை பற்றி பேசுவது வழக்கிற்கு குந்தகம் விளைவித்து விடும்’ என்றார். கனகராஜை ஜெயலலிதாவின் டிரைவர் என சொல்லக்கூடாது என சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அவர் முதல்வராக இருந்த காலத்தில்தான் ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.