சென்னை: கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் பி.பெரியசாமி. இவருக்கு சிறப்பு கிரேட் டிரைவராக பதவி உயர்வு வழங்கி கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அவருக்கு அந்த பணியின் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற தணிக்கை அறிக்கையின்படி பெரியசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்து 21,552ஐ வசூலிக்க கூடுதல் மாவட்ட நீதிபதி 2021 ஆகஸ்ட் 19ம் ேததி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பெரியசாமி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சம்பள நிர்ணயத்தில் தவறு ஏற்பட்டால் எந்த நேரத்திலும் சரிசெய்ய முடியும். கூடுதல் சம்பளம் பெற எந்த பணியாளருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் நீண்ட காலம் கடந்து கூடுதலாக கொடுத்த சம்பளத்தை வசூலிப்பதை அனுமதிக்க முடியாது.
அப்படி வசூலித்தால் அது அந்த பணியாளருக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்திவிடும். எனவே, அவரது சம்பளத்தை மறு நிர்ணயம் செய்த உத்தரவை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அதே நேரத்தில் அவரிடமிருந்து கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளத்தொகையை வசூலிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே, அவரிடம் வசூலிக்கப்பட்டிருந்தால் அந்த தொகையை 3 மாதங்களுக்குள் அவருக்கு திரும்ப தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.