திருவனந்தபுரம்: மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தில் சபரிமலைவரும் பக்தர்களுக்கு கழிப்பறைகள் உள்பட அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகின்ற 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
இந்த தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும் உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதை நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோர் பரிசீலித்தனர்.
இதன்பிறகு நீதிபதிகள் கூறியதாவது: சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெருமளவு பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு கழிப்பறைகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும். நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களிலும் சபரிமலை செல்லும் வழிகளிலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது. தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி இதை உறுதி செய்யவேண்டும். உதவி பொறியாளர்கள் அடிக்கடி பரிசோதித்து நிர்வாகப் பொறியாளருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.