மதுரை: மதுரை மாவட்டம், மேலூர், கீழவளவு, விக்கிரமங்கலம் பகுதிகளில் உள்ள குவாரிகளில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2011ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை செய்த மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம், தனது அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சாட்சியாகவும் சகாயம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை மதுரை கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் சாட்சியம் அளிக்குமாறு சகாயத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லை என்று அவர் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து சென்னை நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஜூன் 6ல் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என நீதிபதி கூறியிருந்தார். இதனிடையே சகாயம், நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை கனிமவள நீதிமன்ற அரசு வழக்கறிஞருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு நீதிபதி எம்.செங்கமலச்செல்வன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘இந்த வழக்கின் விசாரணை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்றைக்கு சகாயம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.