மதுரை : மருத்துவர்கள் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். 2011-ல் ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஜன் ஆக்சைடு வாயு ஏற்றிய சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் மதுரைகிளை இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. ஆக்சிஜனுக்கு பதிலாக தவறுதலாக நைட்ரஜன் ஆக்சைடு கொடுக்கப்பட்டதால் இளம்பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, மருத்துவர் ரவீந்திரன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்றக் மதுரை கிளையில் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,” மருத்துவர்கள் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும். மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுவார்கள் என நம்பி மருத்துவர் சொல்வதை நோயாளிகள் கேட்கின்றனர். வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது; ஆகவே மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.