சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28ம் தேதி வரை நீட்டித்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது கைது சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார். நேற்று நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.