மதுரை : முதலில் மாசுபட்ட ஆழ்துளை கிணற்று நீரில் மாநகராட்சி ஆணையர் குளிக்கட்டும், அதன் பிறகு முடிவு எடுக்கட்டும் என்று ஐகோர்ட் காட்டமாக தெரிவித்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த அரசு சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், காரைக்குடியில் உள்ள தேவகோட்டையில் உள்ள குப்பை கிடங்கை மாற்றுவதோடு, மாசுபட்ட ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி வட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “முதலில் மாசுபட்ட ஆழ்துளை கிணற்று நீரில் மாநகராட்சி ஆணையர் குளிக்கட்டும், அதன் பிறகு முடிவு எடுக்கட்டும். குடிநீர் அவசியம்; ஆழ்துளை கிணற்றை பயன்படுத்தாவிட்டாலும், அது அருகில் இருக்கும் நீர்நிலைகளையும் மாசுபட வைக்கும். இது குறித்து உடனே ஆய்வு செய்து தீர்வு காணப்பட வேண்டும். மனு குறித்து காரைக்குடி மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.