சென்னை : குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் திருநாவுக்கரசுவின் பணி இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருமகளின் வரதட்சணை புகாரில், பேராசிரியர் திருநாவுக்கரசு, மகனுக்கு எதிராக செம்பியம் போலீஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு அடிப்படையில், திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து பல்கலை. உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஓய்வுபெற 4 நாட்களுக்கு முன் தம்மை சஸ்பெண்ட் செய்த பல்கலை. உத்தரவை எதிர்த்து திருநாவுக்கரசு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் திருநாவுக்கரசு மீதான பணி இடைநீக்க உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார்.
இதனை எதிர்த்து பல்கலை. நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், “பொது நலன் சார்ந்திருந்தால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும்.குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரை பணியிடை நீக்கம் செய்வதில் என்ன பொது நலன் உள்ளது?. ஆகவே கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் திருநாவுக்கரசுவின் பணி இடைநீக்க உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே. பல்கலைக்கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களை 12 வாரங்களில் வழங்க பல்கலை.க்கு ஆணையிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்தனர்.