அண்ணாநகர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(எ) ஜான் ஒபெத்(24). இவர் கடந்த 2022ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பாண்டியராஜன், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள பாண்டியராஜனை கைது செய்து ஆஜர்படுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திருமங்கலம் உதவி ஆணையர் பரமானந்தம் உத்தரவின்படி ஜெ ஜெ.நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், செல்போன் டவர் மூலம் பெங்களூரில் பதுங்கியிருந்த பாண்டியராஜனை கைது செய்தனர். இதன்பின்னர் திருவள்ளூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.