Saturday, April 13, 2024
Home » கொரியர் பார்சல் மூலம் குஜராத்தில் இருந்து நாமக்கல்லுக்கு போதை மாத்திரை கடத்தல்: 13 பேர் அதிரடி கைது; அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?

கொரியர் பார்சல் மூலம் குஜராத்தில் இருந்து நாமக்கல்லுக்கு போதை மாத்திரை கடத்தல்: 13 பேர் அதிரடி கைது; அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?

by Karthik Yash
Published: Last Updated on

நாமக்கல்: குஜராத்தில் இருந்து நாமக்கல்லுக்கு போதை மாத்திரைகளை கொரியர் சர்வீஸ் மூலம் வாங்கி விற்பனை செய்து வந்த 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரே நாளில் 9200 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தலில் குஜராத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தது. குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 2 டிஜிபிக்கள், ஐஜிக்கள் மற்றும் அப்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்கியதாக வழக்கும்பதிவு செய்யப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் வடமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் வழியாக இலங்கைக்கும் கடத்தப்பட்டு வந்தது. இதனால் தமிழக போலீசார் அவற்றை பறிமுதல் செய்து வந்தனர். தற்போது கஞ்சா கடத்தல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் கஞ்சா போன்ற போதைப் பொருளை பயன்படுத்துகிறவர்கள், போதை மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிடத் தொடங்கியுள்ளனர் என்று தெரியவந்தது.

இதனால் தமிழகம் முழுவதும் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக மருந்தகங்களுக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. டாக்டர்கள் கடிதம் இல்லாமல் போதை தரும் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதனால் வட மாநிலங்களில் இருந்து இதுபோன்ற போதை தரும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் போதைப் பொருள் மற்றும் ேபாதை மாத்திரைகளை விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஒரு கும்பல் குஜராத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பள்ளிப்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த கவுதம் (32), என்பவரது தலைமையிலான கும்பல்தான் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனையிட்டபோது 4200 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த பரத்குமார், அசோக்குமார் ஆகியோரிடம், போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும், அது நல்ல போதை தருவதால், போதை மாத்திரை விற்பனை செய்தால் நல்ல வருமானம் வரும் என்று தெரியவந்தது.

பரத்குமார், அசோக்குமார் இருவருமே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஈரோட்டில் தங்கி போதை மாத்திரைகளை குஜராத்தில் இருந்து வாங்கி விற்பனை செய்து வந்தனர். அவர்கள் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (எ)சித்திக் சவுத்ரியின் தொடர்பு கிடைத்தது. அவர்தான் குஜராத்தில் இருந்து போதை மாத்திரைகளை தமிழகத்துக்கு அனுப்பி வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக, கவுதம், தினேஷ்குமாரிடம் ஒரு வில்லையை (10 மாத்திரை) ரூ.500க்கு வாங்கி, ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதற்காக கவுதம் தனக்கு கீழ் மாதவன், கவுரிசங்கர், தென்னரசு, சசி, கிரிதரன், தீபன், கவுதம், சுஜித், யுவராஜ், இளையாஸ், விக்கி உட்பட 12 பேரை வேலைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள்தான் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் போதை மாத்திரைகளை தொழிலாளர்களிடம் விற்பனை செய்து வந்தனர் என்று தெரியவந்தது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வாரம் ஒருமுறை குஜராத்தில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகள் வரும்.

அதை எங்கள் பெயருக்கு வாங்கினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் பலரது பெயர்களில் வாங்குவோம். எல்லாமே போலி பெயர்கள்தான். ஆனால் அதில் தொலைபேசி எண் மட்டும் எங்களுக்கு தெரிந்தவர்களின் எண்ணை கொடுப்போம்.இதனால் நாங்கள் கொடுத்த முகவரி இல்லை என்று கொரியர் ஊழியர் எங்களுக்கு போன் செய்வார். நாங்கள் சென்று வாங்கிக் கொள்வோம் என்று தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி நேற்று கொரியரில் வந்த 5 ஆயிரம் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கைது செய்யப்பட்ட கவுதம் உள்பட 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பது குஜராத்தில் இருந்து அனுப்பும் தினேஷ்குமார்தான். இதனால் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குஜராத்திலும் டாக்டர்கள் அனுமதி இல்லாமல் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முடியாது. இதனால் இந்த போதை மாத்திரை விற்பனைக்குப் பின்னால் பெரிய கும்பல் செயல்படுகிறது. தினேஷ்குமாருக்கு அரசியல் தொடர்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போதைக் கடத்தல் பின்னணியில் குஜராத் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே நீதிமன்றம் மூலம் தினேஷ்குமாரை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

* போதை மருந்தாகும் வலி நிவாரணி
அறுவை சிகிச்சை செய்யும்போது வலி நிவாரணியாக ‘டாபன்டாடோல்’ என்ற மாத்திரை வழங்கப்படும். அதை அடிக்கடி உட்கொள்ளும்போது போதை ஏற்படும். அப்படியே பயன்படுத்தினாலும் போதை ஏற்படும். இதனால் போதைக்காக சட்டவிரோதமாக இதை பயன்படுத்துகின்றனர். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் இதை விற்பனை செய்ய மாட்டார்கள். இதை அதிகமாக உட்கொண்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும். இதனால் டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

12 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi