செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கொரியர் கம்பெனிக்கு டெலிவரிக்காக வந்த கேமராவை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அண்ணா நகர் பகுதியில் தனியார் கொரியர் கம்பெனி உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் செங்கல்பட்டில் உள்ள ஒரு முகவரியில் டெலிவரி செய்ய ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கேமரா ஒன்று கொரியர் கம்பெனிக்கு வெளிமாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, கேமராவை டெலிவரி செய்ய கொரியர் கம்பெனி ஊழியர் சென்றார்.
அப்போது, கேமரா பார்சல் வழங்க வேண்டிய நபர் மேற்கண்ட முகவரியில் இல்லை என தெரியவந்தது. மேலும், செல்போன் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. கேமரா டெலிவரி செய்யப்படாத நிலையில், மீண்டும் அதே விலாசத்திற்கு திருப்பி அனுப்ப தனியாக வைக்கப்பட்டது. இந்நிலையில், கொரியர் கம்பெனியில் இருந்த கேமரா திடீரென்று மாயமானது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கொரியர் கம்பெனி நிர்வாகத்தினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், கொரியர் டெலிவரி வேலை செய்யும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவபிரகாஷ்(24) என்பவர் கேமராவை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கொரியர் நிறுவன மேலாளர் தினேஷ்குமார் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து கேமரா திருட்டில் ஈடுபட்டு தலைமறைவான சிவபிரகாஷை தேடி வருகின்றனர்.