பூந்தமல்லி: காணாமல்போன கூரியர் நிறுவன ஊழியர் போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (37). தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவரை காணவில்லை என அவரது மனைவி அம்பத்தூர் காவல் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான இருசக்கர வாகனம் ஒன்று நேற்று முன்தினம் நின்று கொண்டிருப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வானத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நேற்று காலை அதே ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போரூர் போலீசாரும், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று ஏரியில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில் ஏரியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டவர் காணாமல் போன பாண்டியன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாண்டியனுக்கு ₹3 லட்சம் வரை கடன் இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் போரூர் மேம்பாலத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என்ற கோணங்களிலும் போரூர் மற்றும் அம்பத்தூர் போலீசார் இணைந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.