கூடலூர்: தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் கணேசன் (70). விவசாயி. மனைவி கிருஷ்ணம்மாள் (65). மகன் சிவக்குமார் (45). அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி, குழந்தைகளை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று காலை சிவக்குமார் உறவினருக்கு போன் செய்து, தந்தை, தாயுடன் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உறவினர் தகவலின்படி கூடலூர் தெற்கு போலீசார் சென்று மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், கணேசனும், கிருஷ்ணம்மாளும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கணேசன் விவசாயத்திற்காக நிலங்கள் வாங்கியதிலும், விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினாலும் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும், மகன் வாழ்க்கையை நினைத்தும், பேத்திகள் பிரிந்து சென்ற மன வருத்தத்திலும் விஷம் குடித்ததாக தெரிகிறது’’ என்றனர்.