திருபுவனை: புதுச்சேரி, திருபுவனை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் வேதவள்ளி (45). அதே தெருவில் வசிப்பவர் முருகேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. 2 நாட்களுக்கு முன் வேதவள்ளி தனது மாட்டிற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று சோறு வடித்த நீரை வாங்கி எடுத்துச் செல்லும்போது ஜெயலட்சுமியின் வளர்ப்பு நாய் திடீரென அவரை கடிக்க பாய்ந்து துரத்தியது. அதனை தடுக்க கல்லை எடுத்து நாய் மீது அவர் வீசியுள்ளார். அந்த கல் ஜெயலட்சுமி மீது விழுந்துள்ளது. இதைதொடர்ந்து நேற்று மாட்டிற்கு சோறு வடித்த நீர் எடுக்க சென்றபோது வேதவள்ளி மீது நாயை அவிழ்த்து விட்டுள்ளார் ஜெயலட்சுமி. இதனால் அலறியடித்து ஓடியவரை முருகேசனும், ஜெயலட்சுமியும் பிடித்து தடியால் அடித்தும் கத்தியால் குத்தியும் உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருபுவனை துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இது குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.