திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் கணவன் மனைவி ஆகியோர் முட்டை பிரியாணி சாப்பிட்டதால், பரிகார பூஜை செய்யப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஐந்தாம் பிரகாரம் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் பகுதியில், நேற்று முன்தினம் திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவைச் சேர்ந்த ரமேஷ் அவரது மனைவி ஆகியோர் முட்டை பிரியாணி சாப்பிட்டனர். அதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் இருவரிடமும் விசரணை நடத்தினர்.
அப்போது, கோயிலுக்கு அருகே ஒரு மளிகை கடையில் தொழிலாளர்களாக வேலை செய்யும் இருவரும், மதிய உணவு நேரத்தில் ஓட்டலில் இருந்து வாங்கி வந்த முட்டை பிரியாணியை கோயில் பிரகாரத்துக்குள் அமர்ந்து சாப்பிட்டது தெரியவந்தது. மேலும், குஸ்காவில் முட்டை வைத்ததும், குருமாவில் சிக்கன் பீஸ் இருந்ததை, பார்சலை பிரித்தபோதுதான் கவனித்ததாகவும், உடனே அதனை ஒதுக்கி வைத்துவிட்டு குஸ்கா மட்டும் சாப்பிட்டதாகவும் கூறினர்.
பின்னர். இருவரையும் விசாரணைக்காக டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, இருவரும் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
அண்ணாமலையார் கோயில் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலம் என்பதால், இக்கோயிலில் அசைவ உணவு சாப்பிட அனுமதில்லை. எனவே, ஆகம விதிப்படி நேற்று காலை அண்ணாமலையார் கோயிலில் பரிகார பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மேலும், யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, கோயில் பிரகாரங்கள் மற்றும் அசைவ உணவு சாப்பிட்ட இடம் ஆகியவற்றில் சிவாச்சாரியார்கள் தெளித்தனர். கோயில் பிரகாரங்களுக்குள் ஆகம விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்க தேவையான கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.