உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு பிஏபி பாசன திட்டத்தின் கீழ் கான்டூர் கால்வாய் மூலம் சர்க்கார்பதி பவர் ஹவுஸில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. நேற்று மாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவரும், 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அவரது மனைவியும் கான்டூர் கால்வாய்க்கு வந்துள்ளனர். அவர்கள் கால்வாயில் குதிக்க முயன்றதை பார்த்து அப்பகுதியில் மாடு மேய்த்தவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதையும் மீறி தம்பதியர் கால்வாயில் குதித்தனர். இருவரும் சுமார் ஒரு கிமீ தூரம் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரியவந்தது. மற்ற விவரம் தெரியவில்லை. தம்பதி கால்வாயில் குதித்து தற்கொலை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி காண்போரிடம் உருக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.