டெல்லி: ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் ‘ பாரத ஜனாதிபதி ‘ என ராஷ்டிரபதி பவன் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் “இந்தியா” என்ற சொல்லை தவிர்த்து “பாரதம்” என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். வலிமையான, திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி என ஆளுநர் ரவி கூறியுள்ளார். இதேபோல் இந்தியா என சொல்வதை விட பாரதம் என்று அழைப்பதே சரி என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அண்மையில் பேசி இருந்தார்.
இந்தியா என அழைப்பதை நிறுத்திவிட்டு பாரதம் என அழைக்க தொடங்க வேண்டும் என மோகன் பகவத் கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய ஒரு வாரத்தில் குடியரசுத் தலைவர் அழைப்பிதழில் பாரதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் ‘ பாரத ஜனாதிபதி ‘ என ராஷ்டிரபதி பவன் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், வழக்கமாக ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும்.
ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. அரசியல் சட்டம் கூறும் மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற கருத்து ஒன்றிய அரசால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளது. நாட்டின் பெயரை மாற்றும் முயற்சி பாஜக, பிரதமர் மோடியின் தோல்வி பயத்தையே காட்டுவதாக காங்கிரஸ் விமர்சனம் செய்திருக்கிறது.
தேர்தல் தோல்வி நிச்சயம் என்பதால் நாட்டின் பெயரையே மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். எந்த சட்டவிதிகளையும் பின்பற்றாமல் சர்வாதிகாரப் போக்குடன் பாஜக செயல்படுகிறது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். நாட்டின் எந்த சட்டவிதிமுறையையும் பின்பற்றாமல் சர்வாதிகார போக்குடன் பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர். இந்தியா என்ற பெயரை மாற்ற என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.