புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிட உள்ள நிலையில், அதில் தரப்பட்டுள்ள உத்தரவாதங்களை நாடு முழுவதும் 8 கோடி குடும்பங்களுக்கு நேரில் சென்று வழங்கும் ‘வீடு தேடி வரும் உத்தரவாதம்’ எனும் புதிய பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கி உள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகம் ஆகிய 5 பிரிவினருக்கு நீதி வழங்க தலா 5 உத்தரவாதங்கள் உட்பட 25 உத்தரவாதங்களை அளித்துள்ளது. இது, காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பிடிக்க உள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவாதங்கள் மக்கள் முன் பிரபலப்படுத்த, ‘வீடு தேடி உத்தரவாதம்’ எனும் புதிய பிரசாரத்தை காங்கிரஸ் நேற்று தொடங்கியது. வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் உள்ள உஸ்மான்பூர், கைதிவாடாவில் இருந்து இந்த புதிய பிரசாரத்தை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடங்கி வைத்தார்.
மேலும் கட்சியில் 25 உத்தரவாதங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘எங்களின் 25 உத்தரவாதங்கள் அடங்கிய உத்தரவாத அட்டையை நாடு முழுவதும் 8 கோடி குடும்பங்களுக்கு வீடு தேடி சென்று எங்கள் கட்சியினர் வழங்க உள்ளனர். அப்போது, இந்தியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும் என்னென்ன செய்யப் போகிறது என்பதை மக்களிடம் விளக்குவார்கள். நாங்கள் எப்போதும் மக்களுக்காக உழைக்கிறோம். அதற்கான உத்தரவாதம் தருகிறோம். ஆனால் பிரதமர் மோடியும் உத்தரவாதத்தை பற்றி பேசுகிறார். 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என உத்தரவாதம் அளித்தார். அந்த உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை. பொய் சொல்பவர்களுக்கும், தவறாக வழிநடத்துபவர்களுக்கும் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?’’ என்றார். இதற்கிடையே காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது.