சேலம்: ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும் என, பவன்கல்யாண் பேச்சுக்கு, நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி எம்.பி., தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினரும், சேலம் எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திருத்தத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல், போகிற போக்கில் பேசிய பேச்சாக தெரிகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை பாதிக்கின்ற திருத்தங்கள், நாடாளுமன்றத்தில் எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாது. உச்ச நீதிமன்ற வழக்குகளிலும், தீர்ப்புகளிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. கேசவ நந்தபாரதி மற்றும் எஸ்.ஆர்.பொம்மை வழக்குகளிலும் தெளிவான தீர்ப்புகள் உள்ளன. நடிகர் பவன்கல்யாண் இவற்றை படித்து விட்டு பேசுகிறாரா? என தெரியவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டதிருத்தம், இந்த தீர்ப்புகளுக்கு முரணானது. ஆகவே, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டதிருத்தம் செல்லாது. அவ்வாறு தேர்தல் நடந்தால், மாநிலத்தின் வளர்ச்சி, கோரிக்கைகள் பின்னுக்கு தள்ளப்படும். தற்போதைய நிலையில் கூட, ஒன்றிய அரசு மாநில உரிமைகளை எல்லாம் பறித்து, நிதி நிலையை சீர்குலைத்து, பெரியண்ணன் போக்கிலேயே மாநிலங்களை தன்னுடைய காலணிகளுக்கு கீழே வைத்திருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மும்மொழிக்கொள்கையை ஏற்க முடியாது என்றதால், கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,172 கோடியை தர மறுக்கிறது. ஏரி வேலைக்கான ரூ.4 ஆயிரம் கோடி நிறுத்தி வைப்பது, குடிநீர் திட்டத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடியை பாக்கி வைத்திருப்பது, இயற்கை பேரிடருக்கு ரூ.38 ஆயிரம் கோடி கேட்டதற்கு, வெறும் ரூ.276 கோடியை மட்டுமே கொடுப்பது போன்ற மாநில விரோத நடவடிக்கைகளை ஆளும் பாஜக அரசு செய்வதை நாடு அறியும்.
ஒரு அரசு தனது ஆட்சிக்காலமான 5 ஆண்டுகளை முடிக்காமல், ஓராண்டு இருக்கும் போது கலைக்கப்பட்டாலோ, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கவிழ்ந்தாலோ, மீதமுள்ள ஓராண்டிற்கு தான் தேர்தல் நடக்கும் என்பது வேடிக்கையானது. எஞ்சியுள்ள ஓராண்டிற்கு தேர்தலை நடத்தலாமா, வேண்டாமா? என்பது தேர்தல் ஆணையம் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் ஆட்சியாளர்கள் கைப்பாவையாக மாறினால், ஜனநாயகம் வீழ்த்தப்படும். ஆகவே, மதவாத சக்திகளுக்கு துணை போகிற, பவன் கல்யாணின் பேச்சு அரைவேக்காட்டு தனமானது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளில், பல கட்டதேர்தல் வளர்ச்சி தடைபடுகிறது என்கிற மாயையை உருவாக்க நினைப்பதும் தவறாகும். எனவே, பவன்கல்யாண் போன்றவர்கள் உண்மையை புரிந்து கொண்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.