சென்னை: ஜவகர்லால் நேருவின் 61வது நினைவு தினத்தை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் நேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், ஜி.கே.தாஸ், இமயா கக்கன், மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், வக்கீல் டி.செல்வம், அருள் பெத்தையா, முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், மயிலை அசோக் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும் போது அதற்கு அடுத்து என்ன நிலை எடுப்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளது. எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில கட்சிகளின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அமையும். சர்வாதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்கிற முடிவாக எதிர்காலத்தில் அமையக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.