ஏக்கர் கணக்கில் விவசாயம் பார்த்தால்தான் குறிப்பிடத்தக்க வகையில் லாபம் கிடைக்கும் என்பது தவறு. குறைந்த நிலமாகவே இருந்தாலும் எந்தப் பயிரை சாகுபடி செய்கிறோம், என்னென்ன யுக்திகளைக் கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம். இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள் கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், நாகராஜன் சகோதரர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளரிக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட பல காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இதில் நாட்டுக்காய்கறிகளை மட்டுமே இந்த சகோதர்கள் பயிரிடுகிறார்கள். அதுவும் வெறும் 75 சென்ட் நிலத்தில். குத்தகை நிலம்தான். அதில் சில யுக்திகளைக் கையாண்டு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் லாபம் பார்க்கிறார்கள். இதைக் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருவதுதான் ஆச்சரியம்.
மலைகள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது பொற்றையடி கிராமம். இதில் காற்றுக்கு தலையாட்டும் தென்னை மரங்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது ராமலிங்கம், நாகராஜன் சகோதரர்களின் கத்தரி வயல். செடிகளில் பெரிய அளவிலான, நீல நிறத்திலான கத்தரிக்காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. அவற்றை அறுவடை செய்துகொண்டே பேசினார்கள் இந்த சகோதர்கள். `நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக பொற்றையடி பகுதியில் குத்தகை நிலத்தில் நெல் மற்றும் நாட்டுக் கத்தரிக்காய் சாகுபடி செய்து வருகிறோம். 3 ஏக்கரில் நெல்லும், 75 சென்ட் நிலத்தில் கத்தரிக்காயும் பயிர் செய்கிறோம். கத்தரிக்காய் அறுவடை முடிந்தவுடன், அந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்வோம். நெல் சாகுபடி செய்த நிலத்தில் கத்தரிக்காய் சாகுபடி செய்வோம். இவ்வாறு சுழற்சி முறையில் சாகுபடி செய்வதால் நோய்த்தாக்குதல் வெகுவாக குறையும். நெல்லும், கத்தரிக்காயும் நன்கு செழிப்பாக வளரும். கத்தரிக்காய் சாகுபடியை தொடர்ந்து செய்து வருவதால், விதைகளை நாங்களே சேமித்து வைத்து, அடுத்த பட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறோம்’’ என தங்கள் சுழற்சி முறை சாகுபடி குறித்து தெரிவித்த சகோதரர்களிடம் சாகுபடி விவரம் குறித்து கேட்டோம்.
“ இந்த நிலம் களிமண் பாங்கான நிலம். இதனால் நன்றாக 9- 10 முறை டிராக்டர் கொண்டு நிலத்தை உழவு செய்வோம். களிமண் என்பதால் கட்டியில்லாமல் நன்றாக உழுவோம். மண் பூப்போல பொலபொலவென்று இருக்கும். அதுதான் நல்ல பதம். உழவுக்கு முன்னதாக 10 டன் தொழுவுரம் இடுவோம். உழவு செய்தபின்பு ஒரு பகுதியைப் பிரித்து, நாற்றங்கால் அமைப்போம். நாற்றங்காலில் சுமார் 5 ஆயிரம் விதைகளை விதைப்போம். விதைத்ததில் இருந்து 45 – 60 நாட்களில் நாற்றுகளைப் பறித்து நடவு வயலில் நடுவோம். சிலர் 20 நாட்களிலேயே பறித்து நடுவார்கள். அவ்வாறு நட்டால் ஆயுள்காலம் குறைவாக இருக்கும். நன்றாக வளர்ந்த நாற்றுகள், செழிப்பாக நின்று நீண்ட நாளுக்கு பலன் தரும். நடும்போது பாசனம் செய்ய மாட்டோம். 6 அடி இடைவெளியில் 2 அடி அகலம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைத்து அதில் கன்றுகளை நடவு செய்வோம். அரை அடி அளவில் குழியெடுத்து, 2×2 அடி இடைவெளியில் ஒரு செடி என நடவு செய்வோம். நட்ட பிறகு 25 நாட்களுக்கு பாசனமே செய்ய மாட்டோம். மண் வெட்டி மூலம் மண்ணைக் கொத்தி பொலபொலப்பாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வோம். இதன்மூலம் செடிகள் நன்றாக வேர்பிடித்து வளரும். எவ்வளவு மழை வந்தாலும் செடி தாங்கி நிற்கும். தண்ணீர் காட்டாமல் வளர்ப்பதால் கோடை நாட்களில் கூட செடி வாடாது. செடி நட்ட பிறகு எந்தவிதமான உரமும் வைப்பதில்லை.25வது நாளில் பாசனம் செய்வோம். அதில் இருந்து வாரம் ஒருமுறை பாசனம் செய்வோம். செடிகளுக்கு இடையே களைகள் முளைக்காமல் பார்த்துக்கொள்வோம். 10 நாட்களுக்கு ஒருமுறை பூச்சி மருந்துகள் அடிப்போம்.
நாங்கள் ரசாயன பூச்சி மருந்துகள் எதுவும் பயன் படுத்துவது கிடையாது. இயற்கை முறையில் தயாரித்த பூச்சி விரட்டிகளையே பயன்படுத்தி வருகிறோம். பூச்சி விரட்டி தயாரிக்க ஆடு தீண்டா பாளை, புங்கன் இலை, கற்றாழை, பிரண்டை, ஊமத்தை, கருநொச்சி ஆகிய தழைகளை எடுத்து பேரலில் 200 லிட்டர் தண்ணீரில் ஊற வைப்போம். அதனுடன் 10 லிட்டர் கோமியம், 2 லிட்டர் வேப்ப எண்ணெய் இட்டு 10 நாட்கள் ஊற வைப்போம். 10 நாட்களுக்கு பிறகு இந்தக் கலவையை எடுத்து பூச்சி விரட்டி மருந்தாக பயன்படுத்தலாம். ஒருமுறை தயாரிக்கப்படும் பூச்சி விரட்டிக் கலவையை 3 முறை பயன்படுத்துவோம். நடவு செய்த 25வது நாளில் செடிகள் பூக்கத் தொடங்கிவிடும். பின்பு 50வது நாளில் இருந்து கத்தரிக்காய்களை அறுவடை செய்யலாம். அதில் இருந்து வாரத்திற்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். எப்படியும் ஒரு வருடம் தாண்டி மகசூல் எடுத்துக்கொண்டு இருக்கலாம். ஒரு அறுவடையில் எப்படியும் 12 மூட்டை காய் கிடைக்கும். அறுவடை செய்த காய்களை வியாபாரிகள் வயலுக்கே வந்து வாங்கி செல்கிறார்கள். வயலில் எடை போட்டு மூட்டையாக கட்டி அனுப்புகிறோம். அதை நாகர்கோவில் மார்க்கெட்டுக்கு எடுத்து சென்று ஏலம் விட்டு, உரிய பணத்தை பட்டுவாடா செய்துவிடுவார்கள்.
தற்போது 20 கிலோ மூடை கத்தரிக்காயை மார்க்கெட்டில் ரூ.380 என எடுத்துக்கொள்கிறார்கள். கத்தரிக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் 20 கிலோ மூட்டை ரூ.2 ஆயிரம் வரை விலைபோகும். அந்த சமயத்தில் நல்ல வருவாய் கிடைக்கும். இதனால் கத்தரிக்காய் சாகுபடியில் கண்டிப்பாக லாபம் பார்க்கலாம். கத்தரிச் செடிகளை நாம் நன்றாக பராமரித்து வந்தால், 6 மாதம் முதல் 2 வருடம் வரை மகசூல் தந்துகொண்டே இருக்கும். செடிகளுக்கு உரம், இயற்கை பூச்சி மருந்து, வேலை ஆட்கள் என வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகும். ஆனால் வருடத்திற்கு சராசரியாக ரூ.1.50 லட்சம் வருமானம் கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பெய்து முடிந்த பிறகு, கத்தரிச்செடி எந்தவித தாக்குதலும் இல்லாமல் நின்றால், அந்த விவசாயிக்கு லாட்டரி பரிசு விழுந்ததுபோல் அதிக லாபம் கிடைக்கும். எங்களுக்கும் இதுபோல் பலமுறை கிடைத்திருக்கிறது. நாங்கள் இருவரும் கன்னியாகுமரி அருகே 2 ஏக்கர் நிலத்தில் கொய்யா சாகுபடி செய்திருக்கிறோம். தற்போது அறுவடை நடந்து வருகிறது. கொய்யா மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருவதால், தற்போது கத்தரிச் செடிகளுக்குஇடையே கொய்யாச் செடிகளை பயிரிட்டு இருக்கிறோம். கத்தரிச் செடிகள் இன்னும் ஒரு வருடம், அல்லது ஒன்றரை வருடத்தில் மகசூல் குறையும். அந்த நேரத்தில் கத்தரிச் செடிகளை அகற்றிவிட்டு கொய்யாச் செடிகளை பராமரிக்க முடிவு செய்திருக்கிறோம். இதனால் எங்களுக்கு நிரந்தமாக தொடர்ந்து வருவாய் கிடைக்கும்’’ என்கிறார்கள் இந்த சாதனை சகோதர்கள்.
தொடர்புக்கு:
நாகராஜன், ராமலிங்கம்: 87542 13861
அளவில் பெரிய கத்தரிக்காய்
குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நாட்டுக் கத்தரிக்காய் வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுவது இல்லை. வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் நாட்டுக் கத்தரிக்காய்களின் மேல்பகுதி வரி வரியாகவும், அளவில் சிறியதாவும் இருக்கும். ஆனால் குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நாட்டுக் கத்தரிக்காய் அளவில் பெரியதாக இருக்கும். மேலும் சதைப்பற்று கூடுதலாக இருக்கும். குமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதியில் அதிக அளவு விவசாயிகள் இந்த நாட்டுக் கத்தரிக்காய்களை சாகுபடி செய்கிறார்கள்.