கடலூர்: கடலூர் அருகே காதலை கண்டித்ததால், காதலி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே குட்டியாங்குப்பத்தில் ஒரு வீட்டிற்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள், 2 நாட்டு வெடிகுண்டுகளை பற்ற வைத்து எறிந்துள்ளனர். அது வீட்டின் கிரில் கேட்டில் பட்டு வெடித்துள்ளது. சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது வாலிபர்கள் தப்பி சென்று விட்டனர். தகவலறிந்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில், அந்த வீட்டில் வசிக்கும் சிறுமி 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இச்சிறுமி பாட்டி வீட்டுக்கு சென்று வரும்போது புதுச்சேரி மாநிலம் பனையடிகுப்பத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதுதெரிந்து பெண்ணின் தந்தை அந்த வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர், நண்பருடன் வந்து நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.