கூடலூர் : கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 தினங்களாக பெய்து வரும் தொடர் சாரல் மற்றும் கனமழை காரணமாக நாடுகாணி பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் நடைபாதை மற்றும் டீக்கடையின் ஒரு பக்க சுவர் சேதமடைந்தது. தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கடந்த 4 தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதில் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவு மற்றும் மரம் விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைப்பு மற்றும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு நாடுகாணி காவல்துறை மற்றும் வனத்துறை சோதனை சாவடியின் எதிர்ப்புறம் உள்ள நடைபாதையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள கோபிநாதன் என்பவரது டீக்கடையில் ஒரு பக்க சுவர் இடிந்து சேதம் அடைந்தது.
மேலும் கடையில் உள்ளே உள்ள பொருட்களும் சேதம் அடைந்தன. கடை திறந்திருந்த போதிலும் கடையில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்பு சுவர் விடிந்து விழுந்ததால் அதனை ஒட்டி செல்லும் நடைபாதையும் சேதமடைந்து பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நடைபாதை சேதம் அடைந்துள்ளதால் இதன் மேல் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நடந்து செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையொட்டி உள்ள குடிநீர் கிணறு ஒன்றும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிணற்று நீரை குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இதேபோல கூடலூர் பழைய நீதிமன்றம் சாலையில் உள்ள செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியின் சாலையோர மண் சுவர் இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்று சரியும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மின் கம்பத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மண் மூட்டை அடுக்கும் பணி நடைபெற்றுள்ளன. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியை மாவட்ட கலெக்டர் அம்ரித், கூடலூர் கோட்டாட்சியர் குதுரதுல்லா மற்றும் வருவாய்த்துறையினருடன் பார்வையிட்டார்.