*அதிகாரிகளின் எச்சரிக்கையால் தீர்வு
* ₹8.72 லட்சம் தானியங்கள் கொள்முதல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த சில தினங்களாக நடந்த உள்ளூர் வியாபாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலை பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியில் தற்காலிகமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள், அரசியல்வாதிகளின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நிறுத்தப்படுவதால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது எனக் கூறி கடந்த 6 ம்தேதி முதல் உள்ளுர் வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்ட தானிங்களை கொள்முதல் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 6 ம்தேதி மட்டும் தனியங்களை கொள்முதல் செய்தனர். பின்னர் 7, 8 ம்தேதிகளில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்ட தானிங்களை உள்ளூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய மறுத்து, போராட்டத்தில் ஈடுபடுமாறு விவசாயிகளை தூண்டிவிட்டு வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட தானியங்களை கடந்த 2 நாட்களாக கொள்முதல் செய்யாததால் விற்பனைக்கூடத்தில் காத்திருந்த விவசாயிகள் நேற்று முன்தினம் வாகனங்களில் மாற்று விற்பனைக்கூடத்திற்கு ஏற்றி சென்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் தானியங்களை கொள்முதல் செய்யாமல் நேற்று மீண்டும் உள்ளூர் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளியூர் வியாபாரிகளை கொண்டு ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அதிகாரிகள் உள்ளூர் வியாபாரிகளை எச்சரித்தனர். அதனையடுத்து வியாபாரிகள் பணிந்து போராட்டத்தை கைவிட்டனர்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று காலையில் விவசாயிகள் கொண்டுவந்த மக்காசோளம், எள், மணிலா உள்ளிட்ட தானியங்களை தொழிலாளர்கள் எடைபோடும் பணியில் ஈடுபட்டனர். அதனையடுத்து ஒரு சில உள்ளூர் வியாபாரிகளை தவிர பெரும்பாலான வியாபாரிகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் தானியங்களை கொள்முதல் செய்தனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தானியங்களை கொள்முதல் செய்யாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த உள்ளூர் வியாபாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் தானியங்களை கொண்டு வரப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதின் விபரங்கள்: நேற்று 68 விவசாயிகள், 248 மூட்டைகளை விற்பனைக்கு தானியங்களை எடுத்துவந்தனர். அதில் 100 கிலோ எடைகொண்ட மக்காசோளம் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ1626க்கும், அதிகபட்சமாக ரூ.2296க்கும் விற்பனை செய்யபட்டது. உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.7899க்கும், அதிகபட்சமாக ரூ.9870க்கும் விற்பனை செய்யபட்டது.
மணிலா குறைந்தபட்சமாக ஒரு மூட்டை ரூ.6309க்கும், அதிகபட்சமாக ரூ.8920க்கும் விற்பனை செய்யபட்டது. எள் ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.9990க்கும், அதிகபட்சமாக ரூ.14210 க்கு விற்பனை செய்யபட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு தானியங்கள் ரூ.8 லட்சத்து 72 ஆயிரத்து 995 மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டதாக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.