கெங்கவல்லி: கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்ததால் மனைவி மற்றும் 3 குழந்தைகளை ஆட்டோ டிரைவர், அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி மற்றும் மற்றொரு பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (45). இவரது மனைவி செந்தாரப்பட்டியைச் சேர்ந்த தவமணி (38). இவர்களுக்கு விஜயதாரணி (13), அருள் பிரகாஷினி (10) என்ற மகள்களும், அருள்பிரகாசம் (5) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கூடமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே 8வது, 6வது மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்தனர். அசோக்குமார் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் வாடகைக்கு சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு வந்தார்.
அப்போது, அவரது செல்போனில் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த தவமணி, கணவனிடம் இதுகுறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார். பின்னர், அசோக்குமார் மீண்டும் நெய்வேலிக்கு சென்று விட்டார். நெய்வேலியில் இருந்து கடந்த 16ம் தேதி திரும்பி வந்த அசோக்குமார், மனைவியிடம் தன்னை பற்றி சந்தேகப்படுவதால் விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். இதை கண்ட குழந்தைகள், அவரிடம் இருந்து விஷ பாட்டிலை பறித்து வீசி விட்டு, சமாதானம் செய்துள்ளனர். பின்னர், மனைவியிடம் சண்டை போட்டு விட்டு வெளியே சென்று விட்டார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில், அசோக்குமார் அங்குள்ள தோட்டத்தில் உள்ள மரத்தடியில் குடிபோதையில் வெட்டுக்காயத்துடன் கிடந்தார். விசாரித்தவர்களிடம் என் குடும்பத்தினரை சிலர் அரிவாளால் வெட்டி விட்டு, தடுக்க முயன்ற என்னையும் வெட்டி விட்டு தப்பி விட்டனர் என கூறினார்.
தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் அசோக்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு தவமணி, குழந்தைகள் விஜயதாரணி, அருள் பிரகாஷினி, அருள்பிரகாசம் ஆகிய 4 பேரும் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அசோக்குமார், தவமணியின் பெற்றோர் வந்தனர். கெங்கவல்லி போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதற்குள் விஜயதாரணி, அருள்பிரகாசம் ஆகியோர் இறந்துவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தவமணி, அருள் பிரகாஷினி ஆகியோரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் மண்டையில் படுகாயத்துடன் இருந்த அசோக்குமாரை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்பி கௌதம் கோயல் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மோப்பநாய் லில்லி வரவழைக்கப்பட்டது. அது அசோக்குமார் விழுந்து கிடந்த மரத்தடியில் சென்று நின்று விட்டது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அசோக்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த அசோக்குமாருக்கு, குறிஞ்சிப்பாடி பகுதியில் வசிக்கும் 45 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்தது. இருவரும் உல்லாசமாக இருந்ததை, செல்ேபானில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு சென்ற போது, அவரது செல்போனை தற்செயலாக பார்த்த தவமணி, இவர்களது உல்லாச வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 16ம் தேதி வீட்டுக்கு வந்த அசோக்குமார், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி நாடகமாடியுள்ளார். இதனிடையே, ரகசியமாக வைத்திருந்த தனது தகாத உறவு விவகாரம், மனைவிக்கு தெரியவந்ததால் மற்றவர்களுக்கும் தெரிந்து விடுமோ? என அசோக்குமார் அச்சமடைந்துள்ளார். இதனால், மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி, நேற்று (19ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு மேல் வீட்டுக்குள் வந்த அசோக்குமார், தூங்கிக் கொண்டிருந்த மனைவி தவமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.
சத்தம் கேட்டு எழுந்த மகள்கள் மற்றும் மகன், இதை மற்றவர்களிடம் சொல்லி விடுவார்களோ என பயந்து, ஈவு இரக்கமின்றி அவர்களையும் தலை, கழுத்து என உடல் முழுவதும் ஆவேசமாக வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற போது, அவரது மண்டையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் சரிந்ததும், அவர்கள் இறந்து விட்டதாக கருதி, வீட்டில் இருந்து வெளியேறி, மனைவி, குழந்தைகளை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதாகவும், தடுக்க முயன்ற தன்னையும் வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாகவும் கூறி நாடகமாடி உள்ளார். மோப்ப நாய் அவர் கிடந்த இடத்திற்கு சென்று, மேற்கொண்டு நகராமல் அங்கேயே நின்று விட்டதால், சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்த போது, அவர் மாட்டிக் கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.