சென்னை: போலி தயாரிப்புகளை கண்டுபிடித்து ஒழிக்கும் நோக்கத்தில், ஒரு உறுதியான தீர்மானத்துடன் சென்னை காவல்துறையின் ஐபிஆர் என்போர்ஸ்மென்ட் செல், எப்எம்சிஜி துறையில் முன்னணியில் திகழும் ஜோதி லேப்ஸ் லிமிடெட்டுடன் இணைந்து போலியான ஸ்டீல் ஸ்க்ரப்பர்களை தயாரித்து விற்பனை செய்யப்படும் பல பகுதிகளில் அதிரடி சோதனைகளை நடத்தி உள்ளது. ஜோதி லேப்ஸ் அதன் எக்சோ ஸ்டீல் ஸ்க்ரப்பர் என்ற பெயருடன் போலியாக தயாரிக்கப்பட்டுள்ள பொருட்கள் சந்தையில் குவிந்து கிடப்பதை அறிந்து, இதுதொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த போலி எக்சோ பெயரில் சிறிய எழுத்து மாற்றங்களுடன் இ.எக்ஸ்.கியூ, இ.எக்ஸ்.என், இ.சி.ஓ, இ.எக்ஸ்.யூ, எக்சோ என்ற பெயர்களில் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு தரம் குறைந்த மற்றும் மோசமான ஸ்க்ரப்பர்களை வாங்கும் நிலை ஏற்படுகிறது. இதுபற்றி இந்நிறுவனத்தின் லீகல் ஹெட் மற்றும் செயலாளர் ஷ்ரேயஸ் திரிவேதி கூறுகையில், ‘எங்கள் எக்சோ ஸ்க்ரப்பர்களின் தரத்தில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
எக்சோ ஸ்க்ரப்பர்களில் ஸ்டீல் மிகவும் ஸ்மூத்தாக இருக்கும்படி டிசைன் செய்து தயாரிப்பதால் கைகளை காயப்படுத்தாது மற்றும் துருப்பிடிப்பதில்லை. ஆனால், எங்கள் வாடிக்கையாளர்கள், உண்மையான எக்சோ ஸ்க்ரப்பரை வாங்குவதாக நம்பி வாங்கிய பின்பு, அந்த ஸ்க்ரப்பர் துருப்பிடித்து விட்டதாக அல்லது பயன்படுத்தும்போது கைகளில் காயம் ஏற்படுவதாக புகார்கள் தெரிவிக்க தொடங்கியபோது, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
சென்னை காவல்துறையின் ஐபிஆர் என்போர்ஸ்மென்ட் செல்லிடம், நிறுவனத்தின் ஏஜென்சி மூலம் எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்ட உடன், உடனடியாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.20 லட்சம் மதிப்புள்ள போலி தயாரிப்புகளை பறிமுதல் செய்தனர். நிறுவனத்தின் உளவுத்துறை தகவலின்படி, இந்த போலி ஸ்க்ரப்பர்களில் பெரும்பாலானவை சென்னையில் தயாரிக்கப்பட்டு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் வேலூர் போன்ற முக்கிய நகரங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகின்றன.
பெருகி வரும் இந்த போலி ஸ்டீல் ஸ்க்ரப்பர் அபாயத்தை நிறுத்தி சரி செய்வதில் சென்னை காவல்துறை எடுத்த விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம். தமிழ்நாடு எங்களுக்கு மிக முக்கியமான மாநிலம். பொதுமக்கள் எப்போதுமே வாங்குவதற்கு முன்பு எக்சோ என்ற பிராண்ட் பெயரைச் சரிபார்த்து, தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சந்தேகத்திற்கிடமான தயாரிப்புகளை நீங்கள் கண்டால், அது உண்மையான தயாரிப்புதானா என்பதை உங்கள் சில்லறை விற்பனையாளரிடம்/ கடைக்காரரிடம் கேட்டு சரிபாருங்கள் அல்லது உடனடியாக எங்களுக்கு அது பற்றித் தகவல் தெரிவியுங்கள். இத்தகைய போலி தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் ஆகும். வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்கும் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதற்கும் ஜோதி லேப்ஸ் தனது அர்ப்பணிப்பு உணர்வை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது,’ என்றார்.