பீஜிங்: பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது என்று சீனாவில் நடந்த மாநாட்டில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியான உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டார். இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு இந்தியா மீது தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏவி வருகிறது. இதை குழுவின் மற்ற உறுப்பு நாடுகள் கண்டிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாகவே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர கூடாது என்ற இலக்கோடு நடத்தப்பட்டது. சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகவே கொண்டிருக்கின்றன. அத்தகைய நாடுகள் தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன.
பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக திகழ்ந்தால் என்ன நேரும் என்பதை நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் காட்டியுள்ளோம். இனியும் அத்தகைய இலக்குகளை குறிவைக்க தயங்கமாட்டோம். பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடம் கொடுக்க கூடாது. எஸ்சிஓ குழு அத்தகைய நிலைப்பாடு கொண்ட நாடுகளை தயக்கமின்றி கண்டிக்க வேண்டும்’ என்றார்.
முன்னதாக ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன், பாகிஸ்தான், ஈரான், கசகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்புக் குழு உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுனை, ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா – இந்தியா இடையேயான ராணுவ ஹாட்லைன் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.