சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கி, 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு கடந்த மே 27ம் தேதி அன்று அனுப்பி வைக்கப்பட்டு 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 15ம் தேதி வரையிலும், 2ம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் அந்தந்த கல்லூரிகளில் நடத்தப்பட இருக்கிறது. இதில் இடங்களை தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளுக்கான முதலாண்டு வகுப்பு ஜூலை மாதம் 3ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.