Monday, December 4, 2023
Home » கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

என் வயது 30. கடந்த ஒரு மாத காலமாக தினமும் காலையில் எழுந்ததும் சுமார் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் தலை வலி ஏற்படுகிறது. இடது புருவத்துக்கு மேற்புறம் முதல் இடது தாடைக்கு உட்புறம் பின்னந் தலை வரை வலி இருக்கிறது. எதனால், இப்படி ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன?
– சாரதா தேவி, திருவாரூர்.

நீங்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு டென்ஷன் தலைவலி உள்ளது என்று தோன்றுகிறது. டென்ஷன் தலைவலி எல்லா வயதினருக்கும் ஏற்பட வாய்பு உள்ளது என்றாலும் பதின் பருவத்தினருக்கும் இளையோருக்கும் மிக அதிகமா ஏற்படுகிறது. சிலருக்கு நெற்றி, மேல் தாடை மட்டும் இன்றி கழுத்து, தோள்பட்டை வரை கூட வலி பரவும். சிலருக்கு தினசரி என்றில்லாது வாரம்தோறும்கூட வரும். ஒரு நாள் முழுதும் நீடிக்கும். டென்ஷன் தலைவலி என்பது நரம்புகளோடும் மூளையோடும் தொடர்புடையது அல்ல என்று நம்பப்படுகிறது.

அது, நெற்றி, மேல்தாடை, கழுத்துப்புறத் தசைகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகிறது. டென்ஷன் தலைவலிக்கு ஸ்ட்ரெஸ், பதற்றம், கழுத்து மற்றும் தலைக் காயம், கண் பாதிப்பு, பற்கள் பாதிப்பு போன்ற காரணங்களால் ஏற்படக்கூடும். மதுப்பழக்கம், காஃபின் உள்ள உணவுகள், சளி மற்றும் ஃப்ளூ, சைனஸ் பாதிப்பு போன்றவையும் டென்ஷன் தலைவலியை ஏற்படுத்தும். தொடர்ந்து மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் தியானம், உடற்பயிற்சி என மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் இந்தப் பிரச்னையை ஓரளவு கட்டுப்படுத்தலாம். சுய மருத்துவம் செய்யாமல் உடனே, மருத்துவரை அணுகி ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.

வீஸிங் பிரச்னை உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாமா? நரம்பில் ஊசி போட்டுக் கொள்ளலாமா?
– ஜே.மஞ்சுளா, திருப்பூர்.

கர்ப்ப காலத்தில் வீஸிங் பிரச்னை இருக்கும் பெண்கள் இன்ஹேலர் பயன்படுத்தினால் எந்தப்பிரச்னையும் இல்லை. நுரையீரலில் வரும் பிரச்னைதான் வீஸிங் என்பதால் அதற்காகப் பயன்படுத்தும் இன்ஹேலர் மற்றும் மருந்துகள் நுரையீரலில் மட்டுமே செயல்படும். அவை எந்தவகையிலும் உடல் முழுக்கப் பரவிச் சிக்கல்களை ஏற்படுத்தாது. அதனால் குழந்தைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இன்ஹேலர் மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை போன்ற எவையும் பயன்தரவில்லை எனில் நரம்பு ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இதற்குக் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனை அவசியம். முடிந்த அளவுக்கு இன்ஹேலர் பயன்படுத்துவதே நல்லது.

எனக்கு அக்குளில் அக்கி எனப்படும் சிறு சிறு கொப்புளங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. டாக்டரின் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கிறது. பிறகு, மீண்டும் இது ஏற்படுகிறது. இந்த அக்கி ஏன் ஏற்படுகிறது? இதற்கு நிரந்தரத் தீர்வு உண்டா?
– வேதாச்சலம், கும்பகோணம்.

அக்குளில் ஏற்படும் அக்கியை ஷிங்கில்ஸ் அல்லது ஹெர்பிஸ் ஜோஸ்டர் என அழைப்பார்கள். சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் நரம்பு மண்டல அணுக்களுக்குள் தங்கி சிறிது காலம் கழித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது மறு உயிர்ப்பு பெற்று இந்தப் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. வைரஸ் கிருமிகள் மறு உயிர்ப்பு பெறும்போது உடலின் ஒரு பகுதியில் மட்டும் வலி போன்ற உணர்வு ஏற்படும். முதுகு நரம்புகளில் இருந்து வைரஸ் ஒரு நரம்பு வழியாக வெளிப்படுவதால் இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலி சில நாட்கள் நீடிக்கும். பின்னர், தோலில் சீழுடன் சிறு சிறு கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கும். தோல் கொப்புளங்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடித்துப்பரவும்.

இவை சில நாட்களில் காய்ந்து பொருக்குகளாகி உதிரும். இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம். இந்தக் கொப்புளங்கள் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை. எனவே, இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்கள் விலகி இருக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் சின்னம்மை மரணத்தையே ஏற்படுத்த வல்லவை. இந்தக் கொப்புளங்களுக்கு ஈரமான குளிர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதற்கு அலுமினியம் அசிடேட் கலவையைப் பயன்படுத்தலாம். கொப்புளங்கை நன்கு கழுவ வேண்டும். அவற்றை கட்டுப்போட்டு மறைக்கக் கூடாது.

காலமைன் லோஷன் கிரிம்களைப் பூசலாம். வலி இருக்கும் என்றால் டாக்டரின் பரிந்துரையின் பேரில் வலி நீக்கும் மாத்திரைகள் மற்றும் களிம்புகளைத் தடவலாம். வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துப் பூசுவதாலும் இவை கட்டுப்படுகின்றன. இந்தக் கட்டிகள் முகத்தில் குறிப்பாக கண்களுக்கு அருகே தோன்றினால் உடனே மருத்துவர் உதவியை நாட வேண்டும். கவனிக்காமல் விட்டால் பார்வை இழப்புகூட ஏற்படக்கூடும். வலி நீக்கி மருந்துகள், மனச்சோர்வுக்கான மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சைகூட தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்குத் தர வேண்டியது இருக்கும். அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

என் மகனுக்கு 10 வயதாகிறது. இப்போதும் உணவை ஊட்டிவிட்டால் மட்டுமே சாப்பிடுகிறான். இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? அவனைத் தானாகச் சாப்பிட வைப்பது எப்படி?
– கே.சேதுமாதவன், கோவில்பட்டி.

பிறந்ததிலிருந்து கடைப்பிடித்துவரும் பழக்கங்களால்தான் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. தின்பண்டங்களைத் தானாக எடுத்துச் சாப்பிடவில்லையென்றால், அவன் கைகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா எனச் சோதியுங்கள். ஒருவேளை நரம்பு, தசை, எலும்பு போன்றவற்றில் பாதிப்புகள் இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கு விளையாட்டுத்தனமே காரணம். பிடிக்காத உணவை வற்புறுத்திக் கொடுப்பதால் அவன் அந்த உணவைத் தவிர்ப்பான். எனவே, முதலில் அவனுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து அவனையே சாப்பிடப் பழக்க வேண்டும். உணவின் நன்மைகளை அவனுக்குப் புரியும்படி எடுத்துச்சொல்லலாம். மேலும், அவன் வயதில் உள்ள சிறுவர்களோடு அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். நண்பர்கள் சாப்பிடுவதைப் பார்த்து அவனும் தானாகவே சாப்பிடத் தொடங்கி விடுவான்.

குழந்தைகள் விளையாடுவதற்கு மொபைல் போன் கொடுப்பதால் தூங்கும்போதும் டச் போனில் விளையாடுவதுபோல் கைகளை அசைத்தபடி இருக்கின்றனர். கைப்பேசி பயன்படுத்துவதைத் தடை செய்தால் அழத் தொடங்குகின்றனர். அதற்கு என்னதான் செய்வது?
– ஜி.புஷ்பலதா, திருப்பத்தூர்.

அதிக நேரம் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அதன் நிகழ்வுகள் தூக்கத்தில் வெளிப்படத்தான் செய்யும். இன்றைக்குக் குழந்தைகளுக்கு அந்த நிலை அதிகம் ஏற்படுகிறது என்றால் அதற்கான முக்கியக் காரணம் பெற்றோரே. பொழுதுபோக்கிற்காகவும் தன்னுடைய அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்காகவும் கைப்பேசிகளை வாங்கிக் கொடுத்துக் குழந்தைகளின் ஆரோக்கியம் கெடச்செய்கிறார்கள்.

இது அவர்களின் இயல்பான மனநிலையைப் பாதிக்கிறது. முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்கள் சொல்லும் கதைகள்தான் பொழுதுபோக்கு. ஆனால், இன்று எந்த வீடுகளிலும் முதியவர்கள் இல்லாததால், அவர்களின் இடத்தைத் தொழில்நுட்பங்கள் ஆக்கிரமித்துவிட்டன.

மொபைல் போன் மட்டுமல்ல, கார்ட்டூன்களையும்கூட அதிக நேரம் பார்த்தால் அந்த நிகழ்வுகள் தூக்கத்தில் கனவாக வருவது இயல்பே. உடற்பயிற்சி மேற்கொள்வதுதான் இதற்குச் சரியான தீர்வு. முன்பு நொண்டி, கபடி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை இந்த மாதிரியான மனஉளைச்சல் ஏற்படாமல் இருக்கத்தான் விளையாடினார்கள். ஆனால், இன்று மனஉளைச்சல் ஏற்படுத்துவதைத்தான் விளையாடக் கொடுக்கிறோம். அதுமட்டுமல்ல, அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு வராமல், வீட்டுக்கு வந்தும் அதை கைப்பேசிகளின் வழியாகக் கவனித்துக் கொண்டிருப்பதால், அதைப் பார்க்கும் குழந்தைகளும் கைப்பேசியை உற்றுநோக்கப் பழகுகின்றனர். அதன் விளைவு அவர்களது தூக்கத்தில் தெரிகிறது.

லேப்டாப்பில் நீங்கள் எந்நேரமும் தீவிரமாக இருக்கும்போது குழந்தைகள் வந்து `அம்மா, அப்பா’ என அழைத்தால் நீங்கள் கோபம் கொள்வதுபோலத்தான் அவர்களிடமிருந்து நீங்கள் கைப்பேசியைப் பிடுங்கும்போதும் அவர்கள் கோபம் கொண்டு அழுகிறார்கள். எனவே, குழந்தைகளை இந்த நிலையிலிருந்து மாற்ற அவர்களை நீச்சல், சிலம்பம் போன்ற உடலுழைப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சேர்க்கலாம். சமூக நிகழ்வுகளில் ஈடுபடச் செய்யலாம். மருத்துவரீதியாக இதற்குப் பெரியளவில் தீர்வுகள் கிடையாது. ஒருசில குழந்தைகள் இம்மாதிரியான செயல்களில் தீவிரமாக இருந்தால் அருகிலுள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். அவர்கள் தரும் கவுன்சலிங் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

என் வயது 43. எனக்கு திடீரென கடந்த சில நாட்களாக நாக்கு வீங்கி உள்ளதைப் போல உணர்கிறேன். மூச்சுவிட சற்று சிரமமாக அசெளர்யமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பும் இதே போல ஏற்பட்டது. பிறகு, அது தானாகவே சரியாகிவிட்டது. எதனால் இப்படி ஏற்படுகிறது?
– ராஜநாயகம், வேலூர்.

நாக்கு வீங்குவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. சிலர் காலை பல் துலக்கிய பின், நாக்கை வழிக்கும் போது நகங்களால் அழுத்தமாகப் பிரண்டிக்கொள்வார்கள். இதனால் எடீமா (Edema) எனும் உட்புற திரவம் கசியும் பிரச்னை ஏற்பட்டு நாக்கு வீங்கக்கூடும். முதல் நாள் இரவு உண்ட ஆல்கஹால், சோம்பு, சீரகம் போன்ற மசாலா பொருட்கள், புதிய மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களாலும் நாக்கு வீக்கம் ஏற்படும். சிலருக்கு, உயர் ரத்த அழுத்தம், இதய செயல் இழப்புப் போன்ற தீவிர பிரச்னைகளுக்குத் தரப்படும் ஏஸ் இன்ஹிபிட்டர் (Ace inhibitor) எனப்படும் லிஸினோபிரில் (Lisinopril) போன்றவற்றை எடுத்துக்கொள்வதாலும் நாக்கு வீக்கம் ஏற்படக்கூடும்.

ஏதாவது உணவால் ஒவ்வாமை பிரச்னை இருந்தாலும் சிலருக்கு நாக்கு வீக்கம் ஏற்படும். இதைத் தவிர, வைட்டமின் பி12 போதாமை இருந்தாலும் குளோசிடிஸ் (Glossitis) எனும் நாக்கு வீக்கப் பிரச்னை அரிதாக சிலருக்கு ஏற்படும். ஆனால், இது ஒரே நாளில் திடீரென ஏற்படும் பிரச்னை அல்ல. எனவே, ஒரு பொது மருத்துவரை உடனடியாக அணுகி உங்கள் பிரச்னை, உடல் நலம் போன்றவற்றை முழுமையாக விளக்கி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக, எதனால் இந்தப் பிரச்னை வருகிறது எனக் கண்டறிந்தால், சில எளிய மாத்திரை மருந்துகளாலேயே இதை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?