நன்றி குங்குமம் டாக்டர்
மருத்துவப் பேராசிரியர் முத்தையா
நான் மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன். கடந்த ஒரு மாத காலமாக, என் கண்களில் அரிப்பெடுக்கிறது. தேய்த்தால் சிவந்துவிடுகிறது. அவ்வப்போது கண்ணீர் வேறு வழிகிறது. இது என்ன பிரச்னை? தீர்வு என்ன?
– ஆர்.ஷைலஜா, துவரங்குறிச்சி.
கன்சல்ட்டிங் ரூம் பெரும்பாலும் நோய்த்தொற்று காரணமாகவோ, ஒவ்வாமையாலோதான் கண்களில் அரிப்பு ஏற்படும். எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்தச் சூழலைத் தவிர்க்க முயலுங்கள். ஒவ்வாமையின்போது வெளிப்படும் ஹிஸ்டமைன் (Histamine) என்ற ரசாயனம்தான் கண்ணில் அரிப்பை ஏற்படுத்தும். கண்ணை அடிக்கடி தேய்த்தால், அந்த ரசாயனம் அதிக அளவில் வெளியாகி, பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தும். கண்களைத் தேய்க்கும் முதல் சில நிமிடங்களுக்கு அரிப்பு சரியாவதுபோலத் தோன்றினாலும், அடுத்தடுத்த நிமிடங்களில் பிரச்னையின் தீவிரம் அதிகமாகும்.
மின் திரைகளை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கும், போதிய நேரம் தூங்காதவர்களுக்கும் இமைகளின் துடிப்பு குறையத் தொடங்கும். தேவையான அளவு உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், இந்தப் பிரச்னையைத் தடுக்கலாம். மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
எனக்கு ஐந்து மாதக் குழந்தை இருக்கிறது. வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்குள் மார்பில் பால் கட்டிக்கொள்கிறது. என் அம்மா, ‘கட்டிக்கொண்ட பால் கெட்டுப்போன பால்; அதை எடுத்துவிட்ட பிறகு குழந்தைக்குப் பாலூட்டு’ என்கிறார். கட்டிக்கொண்ட பாலை குழந்தைக்குக் கொடுக்கக்கூடாதா?
– ஸ்டெல்லா ராணி, கோவை.
தாயின் மார்பில் கட்டிக்கொண்ட பால், கெட்டுப்போன பால் இல்லை. அதைக் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பால் வெளியே வந்தால்தான் கெட்டுப்போவது எல்லாம் நடக்கும். தாயிடம் இருக்கும்வரை அது நல்ல பால்தான். அம்மாக்களுக்குப் பால் கட்டிக்கொண்டு அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், மார்பு வீங்கி, இன்ஃபெக்சனாகி, அது பெரிய பிரச்னையில் கொண்டுபோய்விடலாம். மேலும், பால் கட்டிக்கொண்ட வலியும் தாங்கமுடியாததாக இருக்கும். எனவே, கட்டிக்கொண்ட பாலை எடுத்துவிடச் சொல்லி அறிவுறுத்தப்பட்டது, காலப்போக்கில் ‘கட்டிக்கொண்ட பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது’ என்ற உண்மைக்குப் புறம்பான நம்பிக்கையையும் சேர்த்துக்கொண்டிருக்கலாம் என்பது என் அனுபவக் கருத்து.
உங்களைப் பொறுத்தவரை, அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும், கட்டிக்கொண்டிருக்கும் பாலைப் பீய்ச்சி எடுத்துவிட்டுத்தான் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்பது இல்லை. ஆனால், வீடு திரும்பியதும் மார்பைச் சுத்தம் செய்துவிட்டுப் பின்னர் பால் புகட்டவும். அலுவலக நேரத்தில், பாலை பிரெஸ்ட் பம்ப் மூலமாக எடுத்து, ஆறு மணி நேரத்துக்குள்ளாகவும் பாப்பாவுக்குக் கொண்டுபோய்க் கொடுக்கலாம். மார்பில் இருந்து பிரெஸ்ட் பம்ப் மூலமாக எடுக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் ஆறு மணி நேரம்வரை கெடாது.
எனக்கு வயது 30. கடந்த ஒரு வாரமாக வயிற்றில் அசௌகர்யமான உணர்வு; பலவீனமாக உணர்கிறேன். சோர்வாக இருக்கிறது. அதிகம் பசிக்கிறது. எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை குறைகிறது. நண்பர் வயிற்றில் பூச்சி இருந்தால் இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றும் என்கிறார். உண்மைதானா… இதை எப்படித் தடுக்கலாம்?
– நல்லதம்பி, பழனி.
வயிற்றில் பூச்சி இருந்தால் பசியின்மை ஏற்படும். செரிமானச் சிக்கல், நெஞ்செரிச்சல் போன்றவையும் ஏற்படலாம். வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்பதை ‘மலப் பரிசோதனை’ மூலம் உறுதிசெய்துகொள்ளுங்கள். வயிற்றுப்பூச்சிகளில் நிறைய வகைகள் இருக்கின்றன. உங்களுக்கு எந்த வகைப் பூச்சியால் பிரச்னை என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மாத்திரையை உட்கொள்ளவும். வயிற்றில் பூச்சிகள் உருவாவதைத் தடுக்க இயற்கை மருந்துகள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் ஏற்படாமலிருக்க, அவ்வப்போது சுண்டைக்காய் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம். சுண்டைக்காய் வற்றலை நெய்விட்டு வறுத்துப் பொடியாக்கி, நீரில் கலந்து கொடுப்பது நல்லது.
பாகற்காய், அகத்திக்கீரை போன்ற கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பப்பாளிக்காயைப் பொரியலாகச் செய்தும் சாப்பிடலாம். நிலவாகைச் செடியின் இலையையும் பவுடராக்கி, நீரில் கலந்து கொடுக்கலாம். நிலவாகைப் பொடி நாட்டுமருந்துக் கடைகளிலேயே கிடைக்கும். வேப்பிலை வயிற்றுப்பூச்சிகளை முழுவதுமாக அழிக்கும்; அதை அப்படியே சாப்பிடலாம். வேப்பிலை, குப்பைமேனி தலா ஒரு கைப்பிடி எடுத்து, நீர்விட்டு அரைத்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சாறாக்கிக் குடிக்கலாம். அதிகபட்சம் 10 மி.லி உட்கொண்டால் போதுமானது.
எனக்கு அடிக்கடி தலைவலி வரும். தேநீர் குடித்ததும் வலி குறைந்துவிடும். சமீபகாலமாக, ஒருநாளில் ஐந்து முறையாவது தேநீர் குடித்துவிடுகிறேன். தேநீர் அதிகம் குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்கிறார்கள். அது உண்மையா? ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்?
– என்.கே.ராஜ்குமார், திருமங்கலம்.
ஒரு நாளில், இரண்டு முறைக்கு மேல் தேநீரோ, காபியோ குடிக்கக் கூடாது. தேநீரிலிருக்கும் கஃபைன் என்னும் ரசாயனம், மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டி நம்மை அடிமையாக்கிவிடும். ஐந்து முறை தேநீர் குடிப்பதென்பது, ரத்த அழுத்தப் பிரச்னையை ஏற்படுத்தும். தேநீரிலிருக்கும் கஃபைன், சர்க்கரை போன்றவை இதயம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை, பசியின்மை இருந்தால் தேநீர் குடிப்பதை
உடனடியாகக் குறைத்துக்கொள்ளவும்.
எனக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது. சமீப காலமாக என் இரண்டு கால்களின் கட்டை விரல்களிலும் எந்த உணர்ச்சியும் இருப்பதில்லை. சுகர் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் நார்மல். என்னைப் பரிசோதித்த டாக்டர், சிசேரியன் செய்வதற்கு முன்னால் முதுகுத்தண்டுவடத்தில் போட்ட ஊசி, பக்கத்தில் இருக்கிற நரம்புகளில் பட்டிருந்தால் இப்படி நிகழலாம் என்கிறார். இது உண்மைதானா? இதைச் சரிசெய்ய முடியுமா?
– கே.ராதாமணி, திருச்செந்தூர்.
சிசேரியன் மூலம் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன பிறகு இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. முதுகுத்தண்டு வடத்தில் போட்ட ஊசி, பக்கத்தில் இருக்கிற நரம்புகளில் படுவதற்கான சாத்தியம் குறைவு. ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால், இதுபோன்ற பாதிப்பு உடனடியாக ஏற்பட்டிருக்க வேண்டும்.
உங்களுக்கு இருக்கிற பிரச்னை, நரம்பு அழுத்தத்தினாலோ அல்லது ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் இருந்தாலோ வருவது. இதை உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். நரம்பியல் நிபுணர் ஆலோசனையின்படி சிகிச்சை எடுக்கவும்.
என் வயது 40. இரு மாதங்களாக மாதவிடாயின்போது ரத்தம் அரக்கு கலந்த சிவப்பு நிறத்தில் வெளியேறுகிறது. இது கவனம் கொடுக்கவேண்டிய பிரச்னையா?
– பூங்குழலி, சென்னை.
கருப்பையின் உள்வரிச்சவ்வு தடிமனாக இருப்பவர்களுக்கு, மாதவிடாயின்போது, அது முழுவதுமாக உடைந்து வெளியேறாது. அப்படிப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்த மாதவிடாய்களின்போது ரத்தம் அரக்கு கலந்த சிவப்பு நிறத்தில் வெளியேறலாம். என்றாலும், இதில் பயப்பட எதுவுமில்லை. உங்களுக்கு 39 வயதுதான் என்பதால், வேறு பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்காது. ஒருவேளை இரண்டு மாதவிடாய்களுக்கு நடுவே லேசான ரத்தப்போக்கு இருந்தால், கருப்பையில் கட்டிபோன்ற வளர்ச்சி ஏதாவது இருக்கலாம்.
அப்படியிருக்கிற பட்சத்தில், ஒரு பயாப்சி எடுத்துப் பார்த்துவிடுவது நல்லது, அல்லது பெல்விக் பகுதியை அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இந்த அல்ட்ரா சவுண்டு ஸ்கேனை பீரியட்ஸ் முடிந்ததும் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.