Friday, July 11, 2025
Home மருத்துவம்ஆலோசனை கவுன்சலிங் ரூம்

கவுன்சலிங் ரூம்

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எனக்கு வயது 29. பூப்பெய்திய காலத்தில் இருந்து எனக்கு மாதவிடாய் பிரச்சினை உள்ளது. மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே சீராக இருக்கிறது. இல்லையென்றால் இரண்டு மூன்று மாதங்கள் தள்ளிப் போகிறது. குழந்தை பிறப்புக்கு மாதவிடாய் எவ்வளவு அவசியம் என்பதை அறிவேன். குழந்தை பிறப்புக்கு இயற்கை முறையில் மருத்துவம் எதுவும் நான் செய்ததில்லை. கருஞ்சீரகம், வெல்லம் கொண்டு எவ்வாறு மருந்து செய்வது? வேறு இயற்கை மருந்துகள் இருக்கின்றனவா?
– சு.கல்பனா, திருநெல்வேலி

பெண்களின் நலவாழ்வுக்கும், இயற்கையான குழந்தை பேற்றுக்கும் சீரான மாதவிடாய் அவசியம். மாதவிடாய் தொடங்கிய காலம் முதல் உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்துள்ளது. அத்துடன் மாத்திரைகள் உட்கொண்ட பின்னரே (induced/withdrawal) மாதவிடாய் வந்துள்ளது. இவை அனைத்துமே உடல் இயக்குநீர் சீரற்ற (hormonal imbalance) நிலையில் உள்ளதைக் குறிக்கின்றன. உங்களுக்குச் சினைப்பை நீர்க்கட்டிகள் (pcod) இருப்பதற்குச் சாத்தியம் உண்டு.

உங்கள் ஊரில் உள்ள மகப்பேறு மருத்துவரிடம் காண்பித்து முதலில் நோயைக் கணித்துக்கொள்ளவும். கருப்பை ஸ்கேன் (USG Pelvis), சினைக்குழாய் பாதை (HSG) அமைப்பு, உடல் இயக்குநீர் அளவுகள் (Hormone assay), குறிப்பாகத் தைராய்டு ஹார்மோன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு நோயின் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
கடைப்பிடிக்க வேண்டியவை:

*உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது நல்லது.
*தினசரி அரை மணி நேர நடைப்பயிற்சி நல்லது.
*சமச்சீரான உணவைப் பசித்த பின்னர் உண்ண வேண்டும்.
*அஜ்வா வகை (ajwa) பேரீச்சம்பழம் நல்ல பலன் தரும், கத்தார் நாட்டில் மதீனா பேரீச்சை என்ற பெயரில் கிடைக்கும்.
*சித்த மருத்துவம் வலியுறுத்தும் பாரம்பரிய உணவுகளான உளுந்தங்கஞ்சி (மாதவிடாயின் முதல் பாதியில்), வெந்தயக் களி அல்லது வெந்தயக் கஞ்சி (மாதவிடாயின் பின் பாதியில்) உண்பது மாதவிடாய் சீரடைய உதவும்.

உணவுக் கற்பம் செய்முறை:

*கருஞ்சீரகம் ஒரு கிராம் அளவு தூளாக்கியது

*பெருங்காயம் பொரித்தது இரண்டு அரிசி அளவு (பொரித்து எடுப்பது பெருங் காயத்தைச் சுத்தப்படுத்தும் முறை)

*இத்துடன் பனைவெல்லம் சிறிது சேர்த்துக் காலை மாலை என சாப்பிடவும்.

*உங்கள் கணவரின் மருத்துவப் பரிசோதனைகள் இயல்பாக இருக்கின்றனவா என்று பார்க்கவும். விரைவில் மாதவிடாய் சீரடைந்து இயற்கை முறையில் தாயாக நல்ல மன
நிலையுடன் இருக்கவும்.

என் வயது 19. அதிகப் பசி, வேகமான செரிமானம், அடிக்கடி சாப்பிடத் தோன்றுதல், சாப்பிடத் தாமதமானால் ஒரு பக்கத் தலைவலி எனப் பல தொல்லைகள் எனக்கு உள்ளன. அடிக்கடி வயிறு புண்ணாகிவிடுகிறது. நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், பெருங்குடல் புண், அடிக்கடி மலம் கழித்தல், பசித்தவுடன் உடல் நடுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. நவீன மருத்துவத்தில் அமிலம் சுரப்பதைக் குறைக்க மருந்துகள் உள்ளனவா?
– கே.ஏ.ஆர்.ராஜவேலு, திருச்சி.

உங்கள் அறிகுறிகளைக் கவனித்தால் இரண்டு வகை பாதிப்புகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. ஒன்று, இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி, அங்கு புண் ஏற்பட்டிருக்கலாம். அடுத்து உங்கள் பெருங்குடலில் அழற்சியாகி புண் உண்டாகி இருக்கலாம். இந்த இரண்டும் எப்படி ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த இரண்டுக்கும் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மட்டும் தீர்வாகாது. உங்கள் வாழ்க்கைமுறை, உணவுமுறை பக்குவங்களும் முக்கியம்.

இரைப்பைப் புண்இது உணவுக்குழலின் இறுதிப் பகுதி. இரைப்பை, முன்சிறுகுடல், மெக்கலின், பக்கப்பை ஆகிய நான்கு இடங்களில் வரும். இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பையிலும் முன்சிறுகுடலிலும் உள்ள சிலேட்டுமப் படலம் சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர்.

இரைப்பைப் புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் கிருமி காரணமாக இரைப்பைப் புண் ஏற்படுவதுதான் இப்போது அதிகம். அசுத்தமான குடிநீரில் இவை வசிக்கும். அதைக் குடிப்போரின் உடலில் பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது இரைப்பைப் புண்ணை உண்டாக்கும்.மது அருந்துதல், புகைப்பிடித்தல், காரம் நிறைந்த உணவு, புளிப்பு மிகுந்த உணவு, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் வறுத்த உணவு போன்றவற்றை அதிக அளவில் உண்பது, குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகப்படியாகக் குடிப்பது, ஆஸ்துமா, மூட்டுவலிகளுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், தலைவலிக்குத் தரப்படும் ஆஸ்பிரின், அனால்ஜின், இபுபுரூஃபன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்றால் பெப்டிக் அல்சர் வருகிறது.

உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, சூடாகச் சாப்பிடுவது, அவசர அவசரமாகச் சாப்பிடுவது போன்ற தவறான உணவுப் பழக்கங்களாலும் இவ்வாறு புண் ஏற்படலாம். எலுமிச்சை, நெல்லிக்காய், கடுக்காய் போன்ற புளிப்புச் சுவை உடையவற்றை அதிகமாகச் சாப்பிட்டாலும் இந்த நோய் ஏற்படும். சில மூலிகை மருந்துகளை நீண்ட காலம் சாப்பிடுவதும் இந்த நோய்க்கு வழி அமைக்கும்.இவற்றுடன் ‘ஜோலிங்கர் எலிசன் நோய்த்தொகுப்பு’ (Zolinger Ellison Syndrome) காரணமாகவும் பெப்டிக் அல்சர் வருகிறது.

சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் இது ஏற்படுகிறது. குறிப்பாக, உறவினர்களுக்குள்ளே திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கு இந்நோய் ஏற்பட மற்றவர்களைவிட மூன்று மடங்கு அதிக சாத்தியம் உள்ளது. ‘ஓ’ ரத்தப்பிரிவு உள்ளோருக்கு இயற்கையிலேயே இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாக இருப்பதால், இவர்களுக்குச் சிறுவயதிலேயே இது வந்துவிடுகிறது. மனக்கவலை, மனஉளைச்சல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், கோபம், பரபரப்பு, ஓய்வில்லாதது போன்ற காரணங்களாலும் இது பலரையும் பாதிக்கிறது.

‘என்டோஸ்கோபி பரிசோதனை’ (Gastro endoscopy) மூலமும், ரத்தப் பரிசோதனையில் ஹெச்.பைலோரி கிருமிக்கு எதிரணுக்கள் (Antibody) உள்ளனவா என்பதைக் கண்டறிவதன் மூலமும் உங்கள் பாதிப்பை உறுதிசெய்து, அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். தற்போது அமிலச்சுரப்பு அதிகமாவதன் வழியாக ஏற்படும் அல்சருக்கு முழுமையான தீர்வு தருவதற்கு நவீன மருந்துகள் நிறைய உள்ளன. ஆனால், உங்களுக்கு எதனால் அடிக்கடி அல்சர் ஏற்படுகிறது என்ற காரணத்தைக் களைந்தால் மட்டுமே நோய் குணமாகும். அதற்கு உங்கள் உணவுமுறையையும் வாழ்க்கைமுறையையும் மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றிக்கொள்ளுங்கள்.

பெருங்குடல் அழற்சி

இந்த நோய் ஐபிஎஸ் (IBS), ஐபிடி (IBD) என்கிற இரு பிரச்சினைகளால் ஏற்படுவது வழக்கம். பாக்டீரியா தொற்று, தவறான உணவுப் பழக்கம், உணவு ஒவ்வாமை, கவலை, பயம், பதற்றம், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் காரணங்கள், ஹார்மோன் சுரப்பில் மாற்றம் போன்றவற்றால் இவை ஏற்படுகின்றன. ‘கொலோனோஸ்கோபி பரிசோதனை’ (Colonoscopy) மூலம் இவற்றை உறுதிசெய்யலாம்.

70 வயதான என் அம்மாவுக்கு சர்க்கரைநோய். கடந்த ஓராண்டாக ஞாபகமறதியால் அவதிப்படுகிறார். கைகளில் நடுக்கம் இருப்பதால், சாப்பிட சிரமப்படுகிறார். நேராக நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. சில நேரம் நடக்க முயன்று கீழே விழுந்துவிடுகிறார். அம்மாவை எந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்? ஆலோசனை தேவை.
– ராஜவேலு, மறைக்காடு

நீங்கள் சொல்லக்கூடியவை அனைத்தும் வயது முதிர்வால் ஏற்படும் ஞாபகமறதி நோய்க்கான அறிகுறிகள். மருத்துவம் இதை `டிமென்ஷியா’ என்கிறது. முழு உடல் பரிசோதனை செய்து பார்த்து ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அளவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். குடும்ப மருத்துவர் இருந்தால், அவரிடம் இதற்கான சிகிச்சையைத் தொடரவும். நடக்கவும் நிற்கவும் தடுமாறுகிறார் என்றால், நரம்பு சார்ந்த குறைபாடு அல்லது `டயாபடிக் நியூரோபதி’ எனப்படும் சர்க்கரைநோயால் கால்களில் ஏற்படும் பாதிப்பாக இருக்கலாம். எனவே, சர்க்கரைநோய் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

உடல்நிலை சீரானதும், ஞாபகசக்திக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். `டிமென்ஷியா’ இருப்பது உறுதிசெய்யப்பட்டால் தெரபி, சிகிச்சைகள் மூலம் ஓரளவு பிரச்னைகளைக் கட்டுப்படுத்தலாம். ஞாபகமறதி உள்ளவர்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இது குறித்த லோசனைகளுக்கு, தாமதிக்காமல் முதியோர்நல மருத்துவரை அணுகுவது நல்லது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi