நன்றி குங்குமம் டாக்டர்
மருத்துவப் பேராசிரியர் முத்தையா
என் வயது 49. கடந்த ஓராண்டாக இரண்டு கால் பாதங்களிலும் (அடிப்பகுதி) எரிச்சல் உள்ளது. மாலை, இரவு நேரங்களில் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில்தான் உள்ளது (90 மற்றும் 130 தான்). வாத கேசரித் தைலத்தை, சில நாள் தேய்த்து வந்தும் குணமாகவில்லை. வீட்டுக்குள் நடக்கும்போதும், செருப்போடு வெளியில் செல்லும்போதும் அதிக எரிச்சலை உணர்கிறேன். இதற்குத் தீர்வு என்ன?
– கி.ப.திரிபுரசுந்தரி, தஞ்சாவூர்.
சர்க்கரை நோய் உள்ளவருக்குக் கால் நரம்புகள் பாதிக்கப்படுவது மிகவும் சகஜம். சர்க்கரை நோய் தொடர்ந்து கடுமையாக இருக்கும்போது உடலில் உள்ள புறநரம்புகள் (Peripheral Nerves) எல்லாமே பாதிக்கப்படும். அதற்கு ‘டயபடிக் நியுரோபதி’ (Diabetic Neuropathy) என்று பெயர். தமிழில் இதை ‘நரம்பு வலுவிழப்பு நோய்’ என்கிறார்கள். மற்ற நரம்புகளை ஒப்பிடும்போது, கால் நரம்பு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். அப்போது கீழ்க்காணும் அறிகுறிகள் ஏற்படும்:
*கால் மரத்துப்போகும்.
*காலில் எரிச்சல் ஏற்படும்.
*மதமதப்பு உண்டாகும்.
*ஊசி குத்தும் வலி உண்டாகும்.
*எரிச்சலும் வலியும் இரவில் அதிகமாக இருக்கும்.
*பஞ்சு மேல் நடப்பதுபோலிருக்கும்.
*பாதங்கள் குளிர்ந்திருக்கும்.
*செருப்பு கழன்று போவதுகூட தெரியாத அளவுக்கு உணர்வு குறைந்து போகும்.
என்ன காரணம்?
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை எகிறும்போது, அந்தச் சர்க்கரையானது ‘சார்பிட்டால்’ எனும் வேதிப்பொருளாக மாறி, புறநரம்புகளில் படியும். அப்போது அது நரம்பிழைகளைப் பாதிக்கும். காலில் ஏற்படுகின்ற தொடு உணர்வு, வெப்ப உணர்வு, வலி உணர்வு, அதிர்வு போன்றவற்றை மூளைக்கு எடுத்துச் சென்று நமக்கு உணர்த்துவது புற நரம்புகள்தான். இந்த நரம்புகளை ‘சார்பிட்டால்’ பாதிக்கும்போது நரம்பு செல்களில் செய்திகள் கடத்தப்படும் வேகம் குறைகிறது. இதன் விளைவாகக் கால் மரத்துப் போகிறது. மதமதப்பு ஏற்படுவதும், பஞ்சு மேல் நடப்பது போலிருப்பதும் இதனால்தான்.
மேலும், இவர்களுக்கு ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுவதால் நரம்பு செல்களுக்குத் தேவையான ரத்தமும் கிடைப்பது இல்லை. முக்கியமாக, நரம்பு முனைகளுக்கு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் முதலில் எரி்ச்சலும், அதைத் தொடர்ந்து ஊசி குத்தும் வலியும் உண்டாகின்றன. பாதம் குளிர்ந்தும் போகிறது.
என்ன பரிசோதனை?
கால் நரம்பு பாதித்திருக்கிறது என்பதை உறுதி செய்வதற்கு ‘பயோதிசியோமெட்ரி’ (Biothesiometry) பரிசோதனை உதவுகிறது. பாதத்தில் முக்கியமான நரம்புகள் இருக்கிற ஆறு இடங்களில் தொடு உணர்வு, அதிர்வு உணர்வு, வெப்ப உணர்வு, குளிர் உணர்வு போன்றவை எப்படி இருக்கின்றன எனக் கண்டறியும் பரிசோதனை இது. இதன் முடிவுகள் பாதத்தில் எந்த நரம்பு, எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகத் தெரிவித்துவிடும்.
சர்க்கரை நோய் தவிர, கால் எரிச்சலுக்கு தமனி ரத்தக் குழாய் பாதிப்பு, ரத்தசோகை, வைட்டமின் பி6, பி12 பற்றாக்குறை, ஃபோலிக் அமிலம் பற்றாக்குறை, உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடிப்பது, சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு பற்றாக்குறை, சில மருந்துகளின் பக்கவிளைவு எனப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன.
உங்களுக்கு என்ன காரணத்தால் காலில் எரிச்சல் வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களில் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருந்ததா என்பதை அறிய ஹெச்பிஏ1சி பரிசோதனையையும் மேற்கொள்ளுங்கள். இதுவும் சரியாக இருந்தால், மற்ற காரணங்களுக்கான ரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, காரணம் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். கால் எரிச்சல் குறைந்துவிடும்.
என் அம்மாவுக்கு வயது 63. அக்குளில் அடிக்கடி சிறு சிறு கொப்புளங்கள் தோன்றி மறைகின்றன. அதை ‘அக்கி அம்மை’ என்கிறார்கள். அதற்கு சிகிச்சை இல்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி ஏற்படும் போதெல்லாம் சந்தனத்தைப் பூசிச் சமாளித்து வருகிறோம். அம்மை நோய்க்கு நவீன மருத்துவத்தில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லையா? என்ன மாதிரியான தடுப்புமுறைகளை மேற்கொள்ள வேண்டும்?
– சி.எஸ்.ராஜேந்திரன், அம்பாசத்திரம்.
சிற்றம்மை (Chicken pox அல்லது Shingles) நோயைத்தான் அம்மை நோய் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த நோயை ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella zoster) எனும் வைரஸ் கிருமிகள் ஏற்படுத்துகின்றன. இது பொதுவாக, குழந்தைகளையும் சிறுவர்களையும்தான் அதிகம் பாதிக்கும். என்றாலும், உங்கள் அம்மாவைப் போன்ற வயதில் உள்ளவர்களையும் அரிதாகப் பாதிக்கலாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தோன்றும் கொப்புளங்கள், மூக்குச் சளி, மூச்சுக் குழல் சளி போன்றவற்றில் வைரஸ் கிருமிகள் இருக்கும். இவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் கிருமிகள் வெளியேறி அடுத்தவர்களைத் தொற்றும். அம்மைக் கொப்புளங்களில் நீர்கோக்கும்போது, நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களை இந்தக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். மேலும், நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுப் பாத்திரங்கள், போர்வை, துண்டு போன்றவை வழியாகவும் அடுத்தவர்களுக்குக் கிருமிகள் பரவ வழியுண்டு.
அறிகுறிகள்
கிருமிகள் உடலுக்குள் புகுந்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். சாதாரண காய்ச்சலோடுதான் நோய் ஆரம்பிக்கும். ஆனால், உடல்வலியும் தலைவலியும் படுத்தி எடுக்கும். அடுத்த நாளில் காய்ச்சல் கடுமையாகும். மார்பு, வயிறு, முகம், கை, கால்களில் தடிப்புகள் தோன்றும். மூன்றாம் நாளில் தடிப்புகள் அனைத்தும் கொப்புளங்களாக மாறிவிடும்.
அவற்றில் நீர் கோக்கும். ஏழாம் நாளில் நீர்க்கொப்புளங்கள் சீழ்க்கொப்புளங்களாக மாறும். அடுத்த நாட்களில் காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் குறைந்து நோயின் தீவிரம் மட்டுப்படும். கொப்புளங்கள் உடைந்தும் உடையாமலும் சுருங்கி, காய்ந்து, பொக்குகளாக மாறி உடலிலிருந்து மறையும். அந்த இடங்களில் தழும்புகள் தெரியும். அவையும் சில மாதங்களில் மறைந்துவிடும்.
சிற்றம்மைக்குத் தற்போது சிகிச்சை உள்ளது. ‘ஏசைக்ளோவிர்’ (Acyclovir) எனும் மருந்து மாத்திரையாகவும், மேற்பூச்சுக் களிம்பாகவும் கிடைக்கிறது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த அளவில் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்தினால் உடனே நோய் கட்டுப்படும். மூளைக்காய்ச்சல், அக்கி அம்மை போன்ற சிக்கல்களும் பிறகு ஏற்படுவதில்லை. அப்படியே அக்கி அம்மை வந்தாலும் அதற்கும் இதே சிகிச்சைதான்.
உங்கள் அம்மாவுக்கு அக்குளில் மட்டும் மறுபடியும் மறுபடியும் கொப்புளங்கள் வருகின்றன என்றால், அவை சீழ்க்கொப்புளங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அதற்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை தேவைப்படும். சில நேரம் அவை வேர்பிடித்துவிடும். அப்போது சிறிய அறுவைசிகிச்சையும் தேவைப்படும். முக்கியமாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த மாதிரி சிக்கல் ஏற்படுவது வழக்கம். எனவே, ஒருமுறை மருத்துவரிடம் நேரடி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.