நன்றி குங்குமம் டாக்டர்
மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர்
என் 10 வயது மகள் சரியாகச் சாப்பிட மறுக்கிறான். `பசியில்லை’ என்கிறான். ‘பூச்சி மருந்து கொடுத்தால் சரியாகிவிடும்’ என்கிறாள் என் தோழி. எத்தனை நாட்களுக்கொரு முறை பூச்சி மருந்துகள் கொடுக்க வேண்டும்?
– ஆர்.ராஜராஜன், சோலையூர்.
பூச்சி மருந்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். குழந்தையின் வயது, எடை, மருத்துவப் பின்னணி போன்றவற்றைக் கேட்டறிந்து, சரியான மருந்தை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும். நீங்களாக மருந்துக் கடைகளில் பூச்சி மருந்து வாங்கிக்கொடுப்பது ஆபத்தானது. குழந்தைகளின் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம், இந்தப் பூச்சிகள்தான்.
குழந்தைகள் மணலில் விளையாடுவார்கள். பிறகு கைகளைக் கழுவ மாட்டார்கள். பூச்சிகளின் முட்டைகள், குழந்தைகளின் நக இடுக்குகளில் புகுந்து வாய்க்குச் செல்லும். காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பண்டங்களைக் கழுவாமல் அப்படியே சாப்பிடுவதன் மூலமும் வயிற்றில் பூச்சிகள் வரலாம். அசைவ உணவுகளின் வழியேவும் பூச்சிகள் வயிற்றுக்குள் போகலாம். குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் இது பாதிக்கும்.
வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்போர், படுக்கையிலிருக்கும் முதியவர்களைச் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறவர்கள், விவசாயிகள், மணல் வேலை செய்பவர்கள் போன்றோரும் சுலபமாக இந்தப் பூச்சித்தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்தப் பூச்சிகள், மூச்சுத்திணறல் பிரச்னையையும் ‘அர்ட்டிகேரியா’ (Urticaria) எனப்படும் சரும அலர்ஜியையும் ஏற்படுத்தலாம். இரண்டு வயதுக்கு மேல்தான் பூச்சி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாத இடைவெளி அவசியம். தினசரி இரு வேளைகள் குளிப்பது, நகங்களை வெட்டுவது, கழிவறை சென்று வந்த பிறகும், வெளியே சென்று வந்த பிறகும் கைகால்களைக் கழுவுவது போன்றவை மிக முக்கியம்.
மாதவிடாயின்போது நான் ஒரு நாளைக்கு ஐந்து நாப்கின்கள் மாற்றுகிறேன். என் தோழி தனக்கு அதிக ரத்தப்போக்கு இருப்பதாகச் சொல்கிறார். ஆனால், அவர் ஒரு நாளைக்கு மூன்று நாப்கின்கள்தான் மாற்றுகிறார். அதிக ரத்தப்போக்கு இருப்பதை வேறு எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
– கே.சில்வியா, நாகூர்.
மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தத்தின் அளவு, ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். உங்களுக்கு அது சாதாரண அளவாகத் தெரியலாம். அதுவே உங்கள் தோழி அதை அதிக ரத்தப்போக்கு என்று சொல்லலாம். மாதவிலக்கின் முதல் நாள் தொடங்கி, மூன்று முதல் 10 நாட்கள்வரை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி ரத்தப்போக்கு நீடிக்கலாம். மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தம், வியர்வை உள்ளிட்ட வேறு சில திரவக் கசிவுகளும் சேர்ந்தது. வெளியேறும் ரத்த அளவைப் பல வகைகளில் கணக்கிடலாம். உபயோகிப்பதற்கு முன்பான நாப்கினின் எடையுடன், உபயோகித்த நாப்கினின் எடையை ஒப்பிட்டுக் கணக்கிடுவது ஒரு முறை.
‘ஆல்கலைன் ஹெமட்டின்’ என்கிற பரிசோதனையின் மூலம் ரத்த இழப்பைக் கணக்கிடுவது இன்னொரு முறை. ஒரு முழு நாப்கின் நனைகிற அளவுக்கு ரத்தப்போக்கு இருந்தால், அதை 10 முதல் 15 மி.லி என எடுத்துக்கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் ஒரு சுழற்சியில் 30 முதல் 50 மி.லிவரை சராசரியாக ரத்தப்போக்கு இருக்கும். இது 80 மி.லி-யைத் தாண்டினால் ரத்தசோகையை ஏற்படுத்தும் அபாயத்துக்கான அறிகுறி. மாதவிடாய் நாட்களில் நீங்கள் உபயோகிக்கிற நாப்கினின் தன்மையைப் பொறுத்தும் இந்த அளவு வேறுபடும்.
25 வயதாகும் வேலைக்குச் செல்லும் பெண் நான். இன்னும் திருமணமாகவில்லை. எனக்கு இப்போதே முதுகுவலி வந்துவிட்டது. விளம்பரங்கள் எல்லாம், பெண்களுக்கு 30 வயதானாலே ஆஸ்டியோபோரோசிஸ் வந்துவிடும் என்று பயமுறுத்துகின்றன. நான் என் எலும்பின் ஆரோக்கியத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும்?”
– ரா. அன்புப்ரியா, சென்னை.
உங்கள் வயதுக்கு, முதுகுவலி என்றாலே எலும்பில் பிரச்னை என்று சந்தேகப்படத் தேவையில்லை. நீங்கள் அமரும், உறங்கும் பொசிஷன், நீண்ட நேரம் வாகனப் பயணம் உள்ளிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஏதாவது உங்கள் முதுகுவலிக்குக் காரணமா என்று முதலில் ஆராய்ந்து பார்க்கவும். அடுத்து, உங்கள் எடை, உயரத்துக்கு ஏற்ற அளவில் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.
ஒருவேளை எடை அதிகமாக இருந்தீர்களென்றால், அதைக் குறையுங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது என்றால், நடைப்பயிற்சி, யோகா என்று ஏதேனும் உடற்பயிற்சியைத் தினமும் செய்யுங்கள். எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் போதிய அளவில் உடலில் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்து, உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதில் குறை இருந்தால், வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் எலும்பின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படும்.