நன்றி குங்குமம் டாக்டர்
மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர்.
“என் மகனுக்கு ஐந்து வயது. அவனுக்கு அடிக்கடி சளிப்பிடித்து, காய்ச்சல் வருகிறது. சில நேரம் காதில் சீழ் வடிகிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது… இதற்கு என்ன தீர்வு?
– ஆர். ராஜசேகர் சென்னை.
“காதில் சீழ் வடிவது உட்புறக் காதுக்குழாயில் தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம். சில குழந்தைகளுக்கு சளி மற்றும் மூக்கடைப்பு ஏற்படும்போது உருவாகும் பாக்டீரியா தொற்று உட்புறச் செவியைப் பாதிக்கும்போது உட்புறக் காதுத் தொற்று அல்லது உட்புறக் காது அழற்சி ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் சளிப்பிடிப்பது, காய்ச்சல், காதுவலி போன்றவை இதன் அறிகுறிகள். சில குழந்தைகள் எப்போதும் அழுதுகொண்டும் காதையும் தலையையும் தொட்டுக்கொண்டும் இருப்பார்கள்.
சிலருக்கு வயிற்றுப்போக்கும் இருக்கும். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். இல்லாவிடில் மூளைத் தொற்று, காதின் பின் எலும்புத் தொற்றுக்கும் வழிவகுத்துவிடும். பெரும்பாலும் டான்சில் அல்லது அடிநாய்டு (Adenoid) போன்றவற்றால் இந்த மாதிரியான பாதிப்பு உண்டாகிறது. இந்த நோய்க்கூறுகளை மருத்துவரிடம் சென்று கவனிக்காமல் இருந்தால் அது, காதினுள் காற்று செல்லாதவாறு அடைபட்டு அறுவை சிகிச்சைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுத்து குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் அடிக்கடி சளி ஏற்படுவதைத் தவிர்த்து, காதுத் தொற்றைத் தடுக்கலாம். காதுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.”
“என் மகளுக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. சமீப நாட்களாகத் தாய்ப்பால் சரியாகச் சுரப்பது இல்லை. இத்தனைக்கும் அவள் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால், புட்டிப்பால் கொடுக்கலாமா என்று யோசிக்கிறாள். இது சரியா?”
– ஜனனி, உடுமலைப்பேட்டை
“பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால்தான் அனைத்து வகையிலும் சிறந்த உணவு. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, பருப்பு சாதம் போன்ற திட உணவுகளைக் கூழாக்கித் தரலாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால், தாய்ப்பால் தருவதன் மூலமே குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மேலும், மாட்டுப் பாலில் இருக்கும் புரதச்சத்து, கால்சியம் சத்துக்களை குழந்தையால் ஜீரணிக்க இயலாது. இதனால் அலர்ஜி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் ஏற்படக்கூடும்.
எனவே, குறைந்தது ஒரு வருடம் வரை தாய்ப்பால் தரவேண்டியது அவசியம். பொதுவாக, தாய்ப்பால் கொடுக்க, கொடுக்கத்தான் அதிகமாகச் சுரக்கும். தாய்ப்பால் குறைவாகச் சுரக்கிறது என்பதற்காகக் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். தாய்ப்பால் சரியாகச் சுரக்கிறதா, இல்லையா என்பதைக் குழந்தையின் எடையே தீர்மானிக்கிறது. குழந்தையின் எடையில் சராசரி முன்னேற்றமும், நாள் ஒன்றுக்கு ஆறு முறை சிறுநீர் கழித்தலும் இருந்தால், குழந்தைக்குத் தாய்ப்பால் போதுமான அளவில் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, தாய்ப்பால் சுரப்புக் குறைவாக இருப்பதாக உணர்ந்தால், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
பொதுவாக, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நிறைய திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். பால், பால் பொருட்கள், மொச்சைப் பயறு, பருப்பு வகைகள், கீரை வகைகள், பப்பாளி போன்ற பழங்கள், கருவாடு, மீன், பூண்டு, முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். உற்சாகமாகவும் மன அமைதியுடனும் இருக்க வேண்டும். குழந்தைக்குத் தேவையானபோது எல்லாம் பாலூட்ட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது பாலூட்ட வேண்டும். ஒரு மார்பில் பால் தீர்ந்த பிறகு, இன்னொரு மார்பில் தர வேண்டும். இப்படி, இரண்டு மார்புகளிலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். இதனால் பால் சுரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.”
“என் தம்பி கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தான். மருத்துவமனைக்குச் சென்றபோது குடல் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாகச் சொல்லி அறுவைசிகிச்சை செய்தார்கள். குடல் அடைப்பு என்றால் என்ன… இது எப்படி ஏற்படுகிறது… இதற்கு அறுவைசிகிச்சைதான் தீர்வா?’’
– கார்த்திக், திருச்சி.
“நமது குடலின் ஏதாவது ஒரு பகுதியில் செரிமானம் ஆன உணவு வெளியேற முடியாதபோது அடைப்பு ஏற்படுவதை, `குடல் அடைப்பு’ என்கிறோம். குடலில் முடிச்சுபோல நாக்குப்பூச்சிகள் திரண்டு அடைத்துக்கொள்வதாலும், குடலின் வளைவுப் பகுதிகளில் ஒன்று குடலிறக்கத்தால் பாதிக்கப்படுவதாலும், குடலின் ஒரு பகுதி அதன் அடியில் நழுவிச்சென்று குடல் செருகல் ஏற்படுவதாலும் குடல் அடைப்புப் பிரச்னை உருவாகிறது. குடல் அழற்சி, காசநோய் (TB) போன்ற நோய்களும் இதற்குக் காரணம். குடல்வால்வுப் பகுதியில் பாதிப்பு ஏற்படுவதாலும் அடைப்பு உருவாகிறது. மேலும், புற்றுநோய், புழுக்களினால் உருவாகும் கொப்பளங்கள் போன்ற பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.
வயிற்றில் கடுமையான வலி, வயிறு வீங்கி கெட்டியாகிப்போதல், வயிற்றைத் தொட்டாலே வலிப்பது, காலை மடக்கிக்கொண்டு வயிற்றைத் தாங்கிக்கொள்ளத் தோன்றுவது, வயிறு எந்த சிறு ஓசையும் இன்றி நிசப்தமாக இருப்பது, மலச்சிக்கல், ரத்தத்துடன் சளி மட்டும் மலமாக வெளியேறுவது, அதிக வேகத்துடன் வெளிப்படும் வாந்தி, வாந்தி பச்சை நிறத்தில் பித்தமாகவோ, மலம் போன்றோ இருப்பது, துர்நாற்றமும் அதைப்போன்று இருப்பது இவை எல்லாம் குடல் அடைப்பின் அறிகுறிகள். இது ஒரு தீவிரமான, ஆபத்தான நிலை. பாதிக்கப்பட்டவரை தாமதமின்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.”