பெரம்பூர்: கவுன்சிலர்கள் தவறு செய்தால் புகார் தெரிவிக்கலாம் என்று வியாசர்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் பேசியுள்ளார். வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்க விழா வியாசர்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. வடசென்னையில் உள்ள பல்வேறு குடியிருப்போர் நல சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் வடசென்னை குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், வழக்கறிஞர் அஜய்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் வடசென்னை பகுதியில் சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு, மின்சார கட்டமைப்பு, குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல், குடிநீர் இணைப்புகள் முறைப்படுத்துதல், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாய் சேய் நல மையங்கள் கொண்டு வருதல், மலேரியா ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள், தெருநாய்களை கட்டுப்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து நெரிசல், நீர்வழி மேலாண்மை, சாலைகள்-மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேம்படுத்துதல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர் எம்எல்ஏவும், வடசென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான ஆர்.டி.சேகர் கலந்துகொண்டு பேசுகையில், வடசென்னை வளர்ச்சி பணிக்கு ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிதி நெருக்கடியில் இருந்தபோதும் அரசு பல்வேறு திட்டப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஒன்றிய அரசு தொடர்ந்து நிதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுகிறது. இதனால் மழை வெள்ள பாதிப்புகளுக்குக்கூட நிதி வழங்காமல் ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
வட சென்னையில் தற்போது கணேசபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு திமுக அரசு தீர்வு கண்டுள்ளது. மேலும் முதல்வர் கூறியபடி, உங்களது பகுதியில் யாரேனும் கவுன்சிலர்கள் வீடு கட்டும்போது அல்லது வேறு ஏதாவது பிரச்னைகளில் உங்களிடம் முறைகேடாக நடந்து கொண்டால் அவர்கள் குறித்து நீங்கள் புகார் அளிக்கலாம். அந்த புகார் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டு கண்டிப்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.