சென்னை: பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலை ஜூன் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12,000 என்ற வீதத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முடிந்தது, அதனால் உற்சாகமடைந்த பெரும்பாலான விவசாயிகள், இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியைத் தேர்வு செய்தனர். தற்போது பருத்தியின் விலை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 எனக் கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பருத்திக் கழகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நடவடிக்கைகள் பருத்தி விலையை நிலைப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஒன்றிய அரசு 2023-2024ம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,620, நீண்ட இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,020 நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் பருத்தி சாகுபடிக்கு நஞ்சைத் தரிசு, கோடை இறவை, என இரண்டு தனித்துவமான பருவங்கள் உள்ளன, அதன்படி பிப்ரவரி-மார்ச் மாதங்களில் விதைப்பு செய்யப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் இருந்து பருத்தி அறுவடை செய்யப்படுகிறது. இந்த இரு பருவங்களிலும் சுமார் 84,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது நஞ்சைத் தரிசுப் பருத்தி அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள பருத்தி விவசாயிகள், பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும். பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு குறுவை நெல் பருவம் ஒரு மாதம் முன்னதாகவே தொடங்கிய போது நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு மாதம் முன்னதாகவே நடை முறைப்படுத்தி அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாகத் தொடங்கிட இந்திய பருத்திக் கழகத்திற்கு உத்தரவிடவும், பருத்திக்கான காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி வருங்காலங்களில் ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். பருத்தி விலையினை நிலைப்படுத்துவதன் மூலமும், விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த விளைபொருட்களுக்கு நியாயமான வருமானத்தை உறுதி செய்வதன் மூலமும், மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.