ஆவடி: பருத்திப்பட்டில் இருந்து திருவேற்காடு செல்லும் முக்கிய சாலை சந்திப்பு குண்டும் குழியுமானதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆவடி அருகே, பருத்திப்பட்டு, திருவேற்காடு, சுந்தர சோழபுரம், கோலடி, அய்யபாக்கம், அயனம்பாக்கம், அம்பத்தூர் தொழில்பேட்டை, மதுரவாயல் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலையின் முக்கிய சந்திப்பு பகுதி அமைந்துள்ளது.
சுந்தர சோழபுரம் கிராம மக்கள் இந்த சாலை சந்திப்பையே ஆவடி ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். பருத்திப்பட்டு ஜங்ஷனிலிருந்து சுந்தரம் சோழபுரம் ஜங்ஷன் வரை ஒரு கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இதில் வேலம்மாள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளும், எஸ்.ஏ பாலிடெக்னிக் உள்ளிட்ட தனியார் கல்லூரிகளும் அமைந்துள்ளன. தினசரி பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும் பயணியர் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக குறுகிய சாலையாக இருப்பதாலும், பள்ளி கல்லூரி நேரங்களில் குண்டும் குழியுமாக உள்ள காரணத்தினாலும் அதிக விபத்துகள் நடந்து, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை திருவேற்காடு நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சந்திப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை விரிவாக்கப்படவில்லை. பள்ளி நேரங்களில் குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை வசதி, மின்விளக்கு வசதி இல்லாததாலும் தற்போது வரை இங்கு விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 5க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்றனர்.