Monday, February 26, 2024
Home » பருத்தியின் விலை அதிகரிப்பால் செயற்கை நூல் இழைக்கு மாற்றம்: பருத்தி விவசாயிகள், பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பு

பருத்தியின் விலை அதிகரிப்பால் செயற்கை நூல் இழைக்கு மாற்றம்: பருத்தி விவசாயிகள், பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பு

by Lavanya

திருப்பூர்: பருத்தியிலிருந்து தயாராகும் பஞ்சு நூலின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் திருப்பூரில் உள்ள 80விழுக்காடு பின்னலாடை நிறுவனங்கள் செயற்கை நூலிழைக்கு மாறியுள்ளனர். இந்திய மட்டுமல்லாது சர்வதேச அளவில் ஆயுத்த ஆடைகளுக்கு பெயர்பெற்ற நகரம் திருப்பூர். இங்கு தயாராகும் பருத்தி ஆடைகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் தற்போது பருத்தியின் விலை அதிகரிப்பதால் திருப்பூரில் உள்ள 80 சதவீதம் பின்னலாடை நிறுவனங்கள் செயற்கை நூல் இழையை நோக்கி நகர தொடங்கியுள்ளன.

பருத்தி ஆடைகளை விட செயற்கை இழை ஆடைகளின் விலை 60 சதவீதம் குறைவாக இருப்பதால் மக்களும் அவற்றையே வாங்க விரும்புகின்றனர். இதனால் பருத்தி விவசாயிகள் முதல் பின்னலாடை நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து முதல் இடத்திலேயே உள்ளது. பருத்தி அதிலிருந்து கிடைக்கும் பஞ்சு, பஞ்சிலிருந்து எடுக்கப்படும் நூல் என இந்த தொழிலை பலகோடி பேர் நம்பியுள்ளனர்.

அவர்களின் வாழ்வில் இடியை இறக்குவது போல சீனாவிலிருந்தும் இந்தியாவின் சூரத், லூதியான நகரங்களிலிருந்தும் வரவழைக்கப்படும் செயற்கை நூல் இழைகள் பின்னலாடை தொழிலை ஆக்கிரமித்துள்ளன. போர்வைகள், துண்டுகளுக்கு பெயர்பெற்ற கரூர் சென்னிமலை, உள்ளிட்ட ஊர்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களிலும் செயற்கை நூலிழைகளே பயன்படுத்தப்படுகின்றன. 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் இந்த தொழிலில் 80 சதவீதம் செயற்கை நூலிழைகளை கொண்டே ஆடைகள் தயாரிக்கப்படுவதால் பெரிய நிறுவனங்களிடமிருந்து அவற்றை கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு பின்னலாடை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

செயற்கை இழையை ஒன்றிய அரசு மலிந்து திணிப்பதாக குற்றம் சாட்டும் பின்னலாடை நிறுவனங்கள் பருத்தி ஆடை உற்பத்தியே இதனால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். அந்நிய நாட்டு ஆடைகளை அணிய கூடாது பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என்று மகாத்மா காந்தி விடுதலை போராட்டத்தின் போது ஊக்கப்படுத்தினார். இந்தியாவின் அடையாளமாக திகழும் அத்தகைய பருத்தி ஆடை தொழிலை காப்பாற்றவேண்டும் என்பதே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

You may also like

Leave a Comment

2 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi